

உரிகம் வனச்சரகம் பிலிக்கல் காப்புக்காட்டை ஒட்டிச் செல்லும் காவிரி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, ஆற்றில் தண்ணீர் பருக வரும் விலங்குகளை பாதுகாக்க தீவிர ரோந்து பணியில் சிறப்பு வனக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.
ஓசூர் வனக்கோட்டத்தில் தமிழக எல்லையில் உள்ள உரிகம் வனச்சரகத்தில் தக்கட்டி, கெஸ்த்தூர், பிலிகல், மல்லஹள்ளி, மஞ்சுகொண்டப்பள்ளி, உரிகம் ஆகிய 6 காப்புக்காடுகள் உள்ளன. இக்காப்புக்காடுகளில் பிலிக்கல், மல்லஹள்ளி மற்றும் கெஸ்த்தூர் ஆகிய வனப்பகுதியையொட்டி, சுமார் 26 கிமீ தூரம் காவிரி ஆறு செல்கிறது.
தற்போது, காவிரியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் ஆற்றங்கரையில் சிறப்பு வனக்குழுவினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இது தொடர்பாக உரிகம் வனச்சரகர் வெங்கடாசலம் கூறியதாவது:
கடந்த சில நாட்களாக காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தென்மேற்கு பருவ மழை தீவிரமடைந்துள்ளது. உரிகம் வனச்சரகத்தையொட்டி செல்லும் காவிரி ஆற்றில் விநாடிக்கு சுமார் 1 லட்சம் கனஅடிக்கும் மேல் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. ஆற்றில் தண்ணீர் குடிக்க வரும் வனவிலங்குகளை வெளியாட் களிடமிருந்து பாதுகாத்து வனப்பகுதிக்கு அனுப்பி வைக்க 3 சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு சுழற்சி முறையில் 24 மணி நேரமும் ரோந்து பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், தப்பகுளி வனப்பகுதி காவிரி ஆற்றங்கரையில் வெள்ளம் சூழ்ந்துள்ள பசவேஸ்வரர் கோயில் பகுதியிலும் கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.