

பென்னாகரம் அருகே ஆபத்தான நிலையில் ஆற்றைக் கடந்து செல்லும் கிராம மக்கள் பாலம் அமைத்துத் தருமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகேயுள்ள அரக்காசன அள்ளி ஊராட்சிக்கு உட்பட்டது பள்ளிமுத்தானூர், மண்ணப்பன் கொட்டாய், பாலிகாடு ஆகிய கிராமங்கள். சுமார் 400 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள மக்கள் பொருட்கள் வாங்க, அருகிலுள்ள அரக்காசன அள்ளி கிராமத்துக்கு செல்ல வேண்டும்.
இதுதவிர, கல்வி, மருத்துவ தேவைகளுக்கு பெரும்பாலை, பென்னாகரம், ஏலகிரி, தருமபுரி ஆகிய ஊர் களுக்குத் தான் செல்ல வேண்டும். வழியில் நாகாவதி அணையில் இருந்து தண்ணீர் செல்லும் ஆற்றைக் கடந்து அரக்காசனஅள்ளி சென்ற பின்னர் அங்கிருந்து பேருந்து பிடித்துத் தான் மேற்கண்ட ஊர்களுக்கு செல்ல முடியும்.
நாகாவதி அணையில் இருந்து பெரும்பாலை நோக்கி தண்ணீர் செல்லும் ஆற்றில் பள்ளி முத்தானூர் அருகிலுள்ள அரைத்துண்டு பள்ளம் என்ற இடத்தில், ஆபத்தான நிலையில் ஆற்றைக் கடந்து தான் மக்கள் செல்ல வேண்டிய நிலை உள்ளது.
அதிக வெள்ளப்பெருக்கு காலங்களில் இந்த வழியாக செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. எனவே, இப்பகுதி மக்கள் 5 கிலோ மீட்டர் தூரம் கூடுதலாக பயணித்து அரக்காசன அள்ளிக்கு செல்லும் நிலை உள்ளது. எனவே, வெள்ளப்பெருக்கு காலங்களில் பாதுகாப்பாக ஆற்றைக் கடந்து செல்லும் வகையில் பாலம் அமைத்துத் தர வேண்டுமென இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து, இப்பகுதியைச் சேர்ந்த பானுமதி கூறும்போது, ‘பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் சீருடையை கையில் வைத்துக் கொண்டு மாற்று உடையில் ஆற்றைக் கடக்கின்றனர். பின்னர், ஆற்றோரத்தில் புதர் மறைவில் நின்று ஈர உடையை அகற்றி சீருடையை அணிந்துகொண்டு பள்ளிக்கு செல்கின்றனர். பெண் குழந்தைகள் உடைமாற்ற மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும், ஆற்றைக் கடக்கும்போது சற்றே பிசகினாலும் நீரில் மூழ்கி அசம்பாவிதங்கள் நடந்து விடும்’ என்றார்.
பாதிக்கப்பட்ட கிராமங்களைச் சேர்ந்த சின்னத்தம்பி, தங்கவேல் கூறியதாவது;
பள்ளிமுத்தானூர் அருகே நாகாவதி ஆற்றில் பாலம் கட்டித் தரக் கோரி பலமுறை எம்எல்ஏ-க்களிடமும், ஆட்சியர் அலுவலகத்திலும் மனு அளித்துவிட்டோம். பள்ளி, கல்லூரி மாணவர்கள் போராட்டத்திலும் ஈடுபட்டனர். ஒவ்வொருமுறையும், ‘விரைவில் பாலம் கட்டித் தரப்படும்’ என்று கூறுகின்றனர். அதன்பின்னர் யாரும் நடவடிக்கை எடுப்பதில்லை.
இதே நிலை நீடித்து வருவதால் மழைக்காலங்களில் சுமார் 6 மாதம் எங்கள் பகுதி மக்கள் கடும் சிரமத்துக்கு உள்ளாகிறோம். குறிப்பாக, மருத்துவம் உள்ளிட்ட அவசர தேவைகளுக்கு செல்ல முடியாமல் தவிக்கும் நிலை உள்ளது. எனவே, அரசு அதிகாரிகள் எங்கள் ஊருக்கு பாலம் கட்டித் தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மீண்டும் எங்கள் கோரிக்கை அலட்சியப்படுத்தப்பட்டால் தொடர் போராட்டம் நடத்துவது என கிராம மக்கள் சார்பில் முடிவெடுத்துள்ளோம், என்றனர்.