

சென்னை: சென்னை சென்ட்ரல் - டெல்லி இடையிலான தமிழ்நாடு விரைவு ரயிலின் 46-ம் ஆண்டு தொடக்க விழாவை ரயில் ரசிகர்கள் கேக் வெட்டி கொண்டாடினர்.
சென்னை சென்ட்ரல் - டெல்லி இடையிலான ‘தமிழ்நாடு விரைவு ரயில்’ சேவை கடந்த 1976 ஆகஸ்ட் 7-ம் தேதி தொடங்கப்பட்டது. முதலில், வாரம் 3 முறை இயக்கப்படும் ரயிலாகவே இது அறிமுகம் செய்யப்பட்டது. கடந்த1988 ஜூனில் தினசரி ரயில் சேவையாக மாற்றப்பட்டது.
இந்த ரயில் சேவை ஒவ்வொரு காலகட்டத்திலும் பல்வேறு நிலைகளில் வளர்ச்சியடைந்து வந்தது. தற்போது, இந்த ரயிலில் எல்எச்பி எனும் நவீனபெட்டிகள் இணைத்து இயக்கப்படுகின்றன.
சென்னையில் இருந்து டெல்லிக்கு 2,182 கி.மீ. தூரம் பயணிக்கும் இந்த ரயில் 10 நிலையங்களில் நின்று செல்லும். அதன் சராசரி பயண நேரம் 33 மணி நேரம். தினமும் சென்னை சென்ட்ரலில் இருந்து இரவு 10 மணிக்குபுறப்பட்டு 3-ம் நாள் காலை 7.40 மணிக்கு டெல்லியை அடையும். மறுமார்க்கமாக, டெல்லியில் இருந்து இரவு 9.05 மணிக்கு புறப்பட்டு, 3-ம் நாள் காலை 6.15 மணிக்கு சென்னை சென்ட்ரலை வந்தடையும்.
இந்நிலையில், தமிழ்நாடு விரைவு ரயிலின் 46-ம் ஆண்டு தொடக்க விழாசென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நேற்று முன்தினம் இரவு கொண்டாடப்பட்டது. இதையொட்டி, சென்னைமண்டல ரயில் ரசிகர்கள் குழுவால் இந்த ரயில் அலங்கரிக்கப்பட்டது. இன்ஜின் பைலட் முன்னிலையில் அவர்கள் கேக் வெட்டி, ரயில்வே ஊழியர்கள், பயணிகளுக்கு வழங்கினர். பின்னர், ரயிலுக்கு முன்பாக புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.