

சென்னை: தெற்கு ரயில்வேயில் ரயில்வே வளாகம், ரயில் நிலையங்களில் குப்பை கொட்டியது தொடர்பாக கடந்த 2021-22 நிதி ஆண்டில் 38,890 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, ரூ.1.07 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: ரயில் நிலையம், ரயில்வே வளாகங்களில் எச்சில் துப்புவது, குப்பை கொட்டுவது, புகைபிடித்தல் போன்ற செயல்களுக்கு ரயில்வே சட்டம் 145 மற்றும் 167-ன் கீழ் தலா ரூ.500 அபராதம் விதிக்கப்படுகிறது.
தண்டவாளம் அருகே அதிக அளவில் குப்பை கொட்டினால் ரூ.5,000 அபராதம் விதிக்கப்படுகிறது. இந்நிலையில், தெற்கு ரயில்வேயில் உள்ள ரயில் நிலையங்களில் தூய்மை பாதுகாப்பு குறித்து, ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க குழு அமைக்கப்பட்டது.
இந்த குழு சார்பில் முதல்கட்டமாக, முக்கிய ரயில் நிலையங்களில் குடிநீர், தூய்மை பாதுகாப்பு தொடர்பான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மேலும், ரயில்வே வளாகங்களை அசுத்தப்படுத்தும் வகையில் செயல்படுவோருக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. அந்த வகையில், தெற்கு ரயில்வேயில் 2021-22 நிதி ஆண்டில் ரயில்வே வளாகம், ரயில் நிலையங்களில் குப்பை கொட்டியது தொடர்பாக 38,890 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, ரூ.1.07 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
2020-21 நிதி ஆண்டில் கரோனா பொது முடக்கம் காரணமாக சிறப்பு ரயில்கள் மட்டும் இயக்கப்பட்டதால், 64 வழக்குகள் மட்டுமே பதிவு செய்யப்பட்டு, ரூ.15,800 அபராதம் வசூலிக்கப்பட்டது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.