ஆலந்தூர் தொகுதியில் ரூ.1.31 கோடி மதிப்பில் நடக்கும் வளர்ச்சித் திட்டப் பணிகளை அமைச்சர் ஆய்வு
ஆலந்தூர்: அய்யப்பன்தாங்கல் ஊராட்சியில் ரூ.1.31 கோடி மதிப்பீட்டில் நடந்து வரும் வளர்ச்சித் திட்டப்பணிகளை அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆய்வு செய்தார்.
ஆலந்தூர் தொகுதிக்குட்பட்ட, குன்றத்தூர் ஒன்றியம், அய்யப்பன்தாங்கல் ஊராட்சியில் குளத்தை சுத்தம் செய்து நடைபாதை வசதியுடன் பூங்கா அமைத்தல், மழைநீர் கால்வாய்கள் அமைத்தல், அரசு ஆரம்பப் பள்ளி பணிகள் உட்பட பல்வேறு திட்டப் பணிகளுக்காக ரூ.1.31 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதன்படி அய்யப்பன்தாங்கல் ஊராட்சியில் 12 இடங்களில் நடைபெற உள்ள கட்டுமானப் பணிகளை குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் நேற்று தொடங்கிவைத்தார்.
அப்போது காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சிக் குழு தலைவர் படப்பை ஆ.மனோகரன், ஊராட்சித் தலைவர் ஜெமிலா பாண்டுரங்கன், ஒன்றிய கவுன்சிலர்கள் உட்பட ஏராளமானோர் உடனிருந்தனர்.
கால்வாய் பணி
ஆலந்தூர் தொகுதிக்கு உட்பட்ட மவுலிவாக்கம், பரணிபுத்தூர், அய்யப்பன்தாங்கல் ஆகிய ஊராட்சி பகுதிகளில் மழைக் காலங்களில் அதிகப்படியாக மழைநீர் தேங்கும் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணும் வகையில், பல்வேறு பகுதிகளில் ரூ.100 கோடி செலவில் மழைநீர் வடிகால்வாய்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.
அதில் ஓருபகுதியான மவுலிவாக்கம் - பரணிபுத்தூர் வழியாக போரூர் ஏரிக்குச் செல்லும் மழைநீர் கால்வாய் பணிகளை அமைச்சர் தா.மோ.அன்பரசன் மற்றும் நீர்வள ஆதாரத்துறை அதிகாரிகளுடன் ஆய்வு செய்தார்.
அப்போது கால்வாய் அருகே உள்ள வீடுகளுக்கு பாதிப்பு வராமல் பணிகளை செய்ய வேண்டும், கால்வாய்களை வளைவுகள் இல்லாமல் நேராக கொண்டுவர வேண்டும், வரும் மழைக்காலத்துக்குள் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளை அறிவுறுத்தினார்.
