

சென்னை: சென்னை உட்பட தமிழகம் முழுவதும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பாஜக தனித்து போட்டியிட்டது. சென்னை மாநகராட்சியில் உள்ள 200 வார்டுகளில் 134-வது வார்டில் பாஜக வேட்பாளர் உமா ஆனந்தன் வெற்றி பெற்றார்.
இதனால், சென்னை மாநகராட்சியில் பாஜகவுக்கு ஒரு கவுன்சிலர் மட்டுமே இருந்தார். இத்தேர்தலில், சென்னை மாநகராட்சியின் 198-வது வார்டில் சுயேட்சையாக நின்று போட்டியிட்ட லியோ சுந்தரம் வெற்றி பெற்றார்.
பாஜகவில் இணையும் நிகழ்ச்சி
இந்நிலையில், சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் கவுன்சிலர் லியோ சுந்தரம் பாஜகவில் இணையும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை முன்னிலையில் கவுன்சிலர் லியோசுந்தரம் பாஜகவில் இணைந்தார். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை லியோ சுந்தரத்துக்கு சால்வை அணிவித்து கட்சியின் உறுப்பினர் அடையாள அட்டையை வழங்கினார்.
தமிழக பாஜக துணை தலைவர் கரு.நாகராஜன், பாஜக இதர மொழி பிரிவின் மாநில தலைவர் ஜெயக்குமார் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
சுயேச்சை கவுன்சிலர் லியோ சுந்தரம் இணைந்ததன் மூலம் சென்னை மாநகராட்சியில் பாஜக கவுன்சிலர்களின் எண்ணிக்கை 2 ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பாக கவுன்சிலர் லியோ சுந்தரத்திடம் கேட்டபோது, “தமிழக பாஜக தலைவர்அண்ணாமலையின் செயல்பாடுகளால் ஈர்க்கப்பட்டு கட்சியில் இணைந்துள்ளேன். வரும் காலங்களில் பாஜக மிகப் பெரிய வளர்ச்சிஅடையும் என்ற நம்பிக்கை உள்ளது” என்றார்.