

சென்னை: காவல், தீயணைப்பு, சிறைத் துறையினருக்காக ரூ.378.52 கோடியில் கட்டப்பட்டுள்ள குடியிருப்புகள், கட்டிடங்களை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். புதிய குடியிருப்புகளை பார்வையிட்டு, காவலர்களின் குடும்பத்தினரிடம் உரையாடினார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: காவல் துறையின் பணிகள் சிறக்க, புதிய காவல் நிலையங்கள், காவலர் குடியிருப்புகள் கட்டுதல், ரோந்து வாகனங்கள் வழங்குதல் போன்ற திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.
அந்த வகையில், சென்னை கொச்சின் ஹவுஸ் காவலர் குடியிருப்பு வளாகத்தில் ரூ.186.51 கோடியில் கட்டப்பட்டுள்ள 1,036காவலர் குடியிருப்புகளை முதல்வர் ஸ்டாலின் நேற்று நேரில் சென்றுதிறந்து வைத்து, 5 காவலர்களிடம் குடியிருப்பின் சாவிகளை வழங்கினார்.
ஈரோடு மாவட்டம் பெருந்துறை உள்ளிட்ட இடங்களில் 32 காவலர் குடியிருப்புகள், சென்னை எம்ஜிஆர்நகர், ஈரோடு, சத்தியமங்கலம்,கன்னியாகுமரி மாவட்டம் கோட்டாறில் 4 காவல் நிலைய கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன.
இந்த குடியிருப்புகள், கட்டிடங்களை முதல்வர் ஸ்டாலின் காணொலியில் திறந்து வைத்தார். பின்னர்,சென்னை புதுப்பேட்டை ஆயுதப்படை காவலர் குடியிருப்பு வளாகத்துக்கு சென்ற முதல்வர், அங்கு ரூ.100.30 கோடியில் கட்டப்பட்டுள்ள 596 காவலர் குடியிருப்புகளை திறந்துவைத்து, 5 காவலர்களிடம் சாவிகளை வழங்கி அவர்கள் குடும்பத்தினரிடம் உரையாடினார்.
அந்த வகையில், மொத்தம் ரூ.378.52 கோடி மதிப்பிலான காவல், தீயணைப்பு, சிறைத் துறை கட்டிடங்களை முதல்வர் திறந்து வைத்துள்ளார். இந்த நிகழ்வில், தமிழ்நாடு காவலர் வீட்டுவசதி கழகத்தின் 2020-21 ஆண்டுக்கான தமிழக அரசின் பங்கு ஈவுத்தொகை ரூ.3 கோடிக்கான காசோலையை முதல்வரிடம் காவலர் வீட்டுவசதி கழகத் தலைவர் ஏ.கே.விஸ்வநாதன் வழங்கினார்.
இதில், அமைச்சர்கள் பொன்முடி,எ.வ.வேலு, செஞ்சி மஸ்தான், எம்எல்ஏக்கள் நா.எழிலன், ஐ.பரந்தாமன், உள்துறை செயலர் பணீந்திர ரெட்டி, டிஜிபி சைலேந்திர பாபு பங்கேற்றனர்.