

மதுரை மாநகராட்சிப் பகுதியில் வரைபட அனுமதிப்படி கட்டினால் மட்டுமே கட்டிடங்களுக்கு பணிநிறைவுச் சான்றிதழ் வழங்க வேண்டும் என்ற விதிமுறையை தீவிரமாக அமல்படுத்த வேண்டும் என்று ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
மதுரை மாநகரில் புதிய கட்டிடம் கட்ட வேண்டுமானால், மாநகராட்சி நிர்வாகம் அல்லது உள்ளூர் திட்டக் குழுமத்தின் (எல்.பி.ஏ.) அனுமதி பெற வேண்டும். குடியிருப்பாக இருந்தால் 10 ஆயிரம் சதுர அடி வரை மாநகராட்சி நகரமைப்புப் பிரிவும் அதற்கு மேல் உள்ளூர் திட்டக் குழுமமும் அனுமதி வழங்க வேண்டும்.
வணிகக் கட்டிடமாக இருந்தால், 2,000 சதுர அடி வரை மாநகராட்சி நகரமைப்புப் பிரிவு, 2,000-க்கும் மேலான சதுர அடி முதல் 26,500 சதுர அடி வரை உள்ளூர் திட்டக் குழும அனுமதி பெற வேண்டும். அதற்கு மாநகராட்சி நகரமைப்புப் பிரிவும் ஒப்புதல் வழங்க வேண்டும். இந்த விதிகளுக்கு உட்பட்டே கட்டிடங்கள் கட்டப்பட வேண்டும்.
ஆனால், மாநகராட்சிப் பகுதியில் கட்டிட அனுமதி பெற்று நிர்ணயித்த சதுர அடிக்கு மேல் விதிகளை மீறி குடியிருப்புகள், வணிகக் கட்டிடங்கள் கட்டப்படுகின்றன. மாநகராட்சி நகரமைப்புப் பிரிவி னர், உள்ளூர் திட்டக் குழும அதிகாரிகளின் மறைமுக ஒத்துழைப்பால் விதிமீறல்கள் மறைக்கப்பட்டு கட்டிடங்களுக்கு ஒப்புதல் வழங்கி அதற்கு வரி நிர்ணயம் செய்யப்படுகின்றன.
மாநகராட்சி வரி நிர்ணய ஒப்புதல் சீட்டு அடிப்படையில் மின்வாரியம் அந்தக் கட்டிடங்களுக்கு இதுவரை மின் இணைப்பு வழங்கி வந்தது. அதனால், விதிமீறல் கட்டிடங்கள் பெருகின. மாநகராட்சிக்கும் வருவாய் இழப்பும் ஏற்பட்டது. விதிமீறல் கட்டிடங்களுக்கு எந்தக் கடிவாளமும் இல்லாமல் மின் இணைப்புப் பெற்று வந்தனர்.
இந்த முறைகேடுகள் வெளிச் சத்துக்கு வரவே, தற்போது மின் வாரியத்தில் மாநகராட்சியின் பணி நிறைவுச் சான்றிதழ் (completion certificate) பெற்றால் மட்டுமே மின் இணைப்பு வழங்க வேண்டும் என்ற நடைமுறை பின்பற்றப்படுகிறது. அப்படியிருந்தும் மாநகராட்சி அதிகாாிகள் முறைகேடாக ஒப்புதல் வழங்கி விதிமீறல் கட்டிடங்களுக்கு பணி நிறைவுச் சான்றிதழ் வழங்குவதாக குற்றச்சாட்டு எழுந்துள் ளது.
இதைத் தடுக்க மாநகராட்சி ஆணையர் சிம்ரன்ஜீத் சிங், வரைபடத்தில் உள்ளபடி கட்டிடம் கட்டப்பட்டுள்ளதா? என்று நகரமைப்பு அதிகாரி அல்லது உதவி ஆணையர் ஆய்வு செய்த பிறகே அதற்கான கட்டிட நிறைவுச் சான்றிதழ் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.
மேலும், கட்டிடத்தை அதன் அடித்தள கட்டுமானப் பணி யில் இருந்தே நேரடியாகக் கண் காணித்து பணி நிறைவுச் சான்றி தழ் வழங்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
இதற்கிடையே மின்வாரியமும் கட்டிட பணி நிறைவுச் சான்றிதழ் இன்றி மின் இணைப்பு வழங்க இயலாது என்று கெடுபிடி காட்டத் தொடங்கி உள்ளது.
அதனால், விதிகளை மீறி கட்டிடம் கட்டியோர் தற்போது தங்கள் கட்டிடங்களுக்கு மின் இணைப்புப் பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
மாநகராட்சி ஆணையர் சிம்ரன் ஜீத் சிங் கூறுகையில், வணிகக் கட்டிடங்கள் மட்டுமில்லாது குடியிருப்புக் கட்டிடங்களும் நிர்ணயிக்கப்பட்ட சதுர அடியில் கட்டப்படுகிறதா? என்று கண்காணிக்கப்படுகின்றன. விதிமீறல் இருந்தால் மின் இணைப்புப் பெற பணி நிறை வுச் சான்றிதழ் வழங்கப்படாது, என்றார்.