

உடுமலையை அடுத்த அமராவதி முதலைகள் பண்ணையை சுற்றுலாத் தலமாக மாற்ற வேண்டுமென்று கோரிக்கை எழுந்துள்ளது.
தமிழகத்தில் சென்னை கிண்டி பூங்கா, சாத்தனூர் அணை, ஒகேனக்கல்லுக்கு அடுத்ததாக திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையை ஒட்டிய கல்லாபுரம் செல்லும் சாலையில் முதலைகள் பண்ணை உள்ளது. இது 1976-ல் உருவாக்கப்பட்டது. அமராவதி வனத்துறையின் கட்டுப்பாட்டில் பராமரிக்கப்பட்டு வருகிறது.
பார்வையாளர்களுக்கு நுழைவுக் கட்டணமாக ரூ.25, ரூ.50 என வசூலிக்கப்பட்டு வந்தது. கடந்த 3 ஆண்டுகளாக சிறுவர் களுக்கு ரூ.5, பெரியவர்களுக்கு ரூ.10 என கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. 2000-ம் ஆண்டில், சுமார் 600-க்கும் மேற்பட்ட முதலைகள் இருந்தன. ஒரு கட்டத்தில் முதலைகளுக்கான உணவுத் தேவையையும், பாதுகாப்பையும் பூர்த்தி செய்வது, வனத்துறைக்கு சவாலான பணியாக மாறியது. இதையடுத்து, பண்ணையில் இருந்த முதலைகள், பாதுகாப்பாக அடர்ந்த வனப்பகுதிக்குள் உள்ள ஆறுகளில் விடப்பட்டன. மேலும், பண்ணையில் இன விருத்தியை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட தால், தற்போது 99 முதலைகள் இருக்கின்றன. நன்னீர் முதலைகள் சராசரியாக 100 ஆண்டுகள் வரை ஆயுள் கொண்டவை.
தற்போது, அங்கு ஒரு ஆண்டு முதல் 35 வயதுள்ள முதலைகள் வரை வாழ்கின்றன. இறைச்சி, மீன்கள் உணவாக வழங்கப்படுகின்றன. இதற்காக ஆண்டுக்கு ரூ.15 லட்சம் வரை செலவாகிறது என்கின்றனர் வனத்துறையினர்.
அமராவதி வன எல்லைப் பகுதியில், கேரள மாநிலம் மறையூர் வனத்துறைக்கு சொந்தமான, தூவானம் அருவியை ஒட்டிய சிறு பகுதியைக்கூட, அந்த மாநில அரசு சுற்றுலாத் தலமாக உருவாக்கியுள்ளது. அங்கு பல கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்ட ‘எக்கோ ஷாப்’ திட்டம், அப்பகுதி மலைவாழ் மக்களுக்கு வருவாய் ஈட்டும் திட்டமாக உருவெடுத்துள்ளது.
புலிகள் காப்பகத்துக்குள் அமராவதி வனச்சரகம் இருந்தாலும், அமராவதி முதலைகள் பண்ணை இருப்பது அணையை ஒட்டிய கிராமப் பகுதி.
இதுகுறித்து திருப்பூர் மாவட்ட வன அலுவலர் ஏ.பெரியசாமி கூறும்போது, “அமராவதி முதலை கள் பண்ணையில், கட்டுமானப் பணிகளை மேம்படுத்தினால் அதிக அளவில் சுற்றுலாப் பயணிகளை கவர முடியும். இதன் மூலமாக, மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த முடியும். ரூ.50 லட்சத்தில் மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்ள அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது” என்றார்.
அமராவதி வனச்சரக அலுவலர் தங்கராஜ் பன்னீர்செல்வம் கூறும்போது, “தற்போது, பண்ணையில் 99 முதலைகள் பராமரிக்கப்படுகின்றன. இதற்காக, ஆள் கூலி, பராமரிப்பு செலவு என ஆண்டுக்கு ரூ.25 லட்சம் வரை செலவாகிறது. ஓராண்டில் சுமார் ஒரு லட்சம் பேர் பார்வையிடுகின்றனர். இதனை சுற்றுலாத் தலமாக மேம்படுத்தும்பட்சத்தில், ஆண்டுக்கு ரூ.1 கோடிக்கும் மேல் வருவாய் கிடைக்க வாய்ப்புள்ளது. மேலும், கரட்டுப்பதி பகுதியில் உள்ள 60 மலைவாழ் குடும்பங்களுக்கு நிரந்தர வேலைவாய்ப்பும், வருவாயும் கிடைக்கும். இதுகுறித்து அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது. இங்கு, தேவையான கட்டிடங்கள் இருப்பதால், சுற்றுலாப் பயணிகளுக்கான அரங்கம் கட்டுதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டால் போதுமானது” என்றார்.