

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருப்பதை கண்டித்து ஆளுநர் மாளிகை முன்பு தமிழக வாழ்வுரிமை கட்சி முற்றுகை போராட்டம் நடத்தும் என்று அக்கட்சியின் தலைவர் தி.வேல்முருகன் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருப்பது தமிழக மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
உச்ச நீதிமன்ற விசாரணையில் கடந்த 30-ந் தேதியன்று காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது என மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் முகுல் ரோத்தகி தெரிவித்திருந்தார். ஆனால், திடீரென்று காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதனை தமிழக மக்கள் மன்னிக்கமாட்டார்கள்.
மத்திய அரசின் இந்த செயலைக் கண்டித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் சென்னையில் உள்ள ஆளுநர் மாளிகையை முற்றுகையிடும் போராட்டம் அக்டோபர் 6-ம் தேதியன்று நடைபெறும்.