

நாசாவும், இஸ்ரோவும் இணைந்து 2 பில்லியன் டாலர் மதிப்பில் செயற்கைக்கோள் தயாரித்து வருகிறது என இஸ்ரோ முன்னாள் தலைவர் கே.சிவன் தெரிவித்தார்.
ஈரோடு புத்தகத் திருவிழாவில் நேற்று நடைபெற்ற நிகழ்வில், ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழக பேராசிரியர் வெ.முத்தமிழரசனுக்கு, ‘அறிவியல் மேதை ஜி.டி.நாயுடு விருது’ வழங்கப்பட்டது. விருதை வழங்கி இஸ்ரோ முன்னாள் தலைவர் கே.சிவன் பேசியதாவது:
இந்தியாவின் மக்கள் தொகையில் 80 சதவீதம் பேர் கிராம பகுதிகளில் வசிக்கின்றனர். இந்நிலையில், ஒரு புதிய தொழில்நுட்பம் வரும்போது, அது எல்லோருக்கும் போய் சேர்ந்தால்தான் அந்நாடு வளரும். உலகில் ராக்கெட் தொழில் நுட்பத்தை ஆங்கிலேயருக்கு எதிரான போரில், முதல் முதலில் திப்புசுல்தான் பயன்படுத்தினார். எனவே, விண்வெளி தொழில்நுட்பத்தில் இந்தியாதான் முன்னோடி.
தற்போது, உங்கள் ஒவ்வொருவரின் வாழ்க்கையும், நொடிகளும் விண்வெளி தொழில்நுட்பத்துடன் இணைந்துள்ளது.
எப்போது புயல் அடிக்கும், கடலில் எந்த பகுதியில் அதிக மீன்கள் கிடைக்கும் என்பதைக் கண்டறியும் செயலியை கூட உருவாக்கியுள்ளோம். இதனால், ஒரு நாளைக்கு 4 ஆயிரம் கோடி மீன் வர்த்தகம் நடக்கிறது.
அதேபோல, சர்வதேச எல்லையை தாண்டும்போது அதனை வெளிப்படுத்தும் செயலி உள்ளது. ஆனால், நமது மீனவர்கள் அதனை பயன்படுத்துவது இல்லை. இன்றைய உலகில் செயற்கைக்கோள் இயக்கத்தை நிறுத்தினால், அனைத்தும் நின்று விடும்.
நாசாவும், இஸ்ரோவும் இணைந்து 2 பில்லியன் டாலர் மதிப்பில் செயற்கைக்கோள் தயாரித்து வருகிறது. அதன்மூலம் 700 கிமீ உயரத்தில் இருந்து, பூமியில் நடக்கும் ஒரு செமீ நகர்வைக் கூட கண்டுபிடிக்க முடியும். பூகம்பம், காலநிலை மாற்றம் போன்றவற்றை இது கண்காணிக்கும் இது உலகுக்கு உதவியாக இருக்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.