Published : 20 Oct 2016 10:12 am

Updated : 20 Oct 2016 10:14 am

 

Published : 20 Oct 2016 10:12 AM
Last Updated : 20 Oct 2016 10:14 AM

உள்ளாட்சி 19: மழை நீர் சேகரித்த நாட்டின் முதல் கிராமம்!- மைக்கேல்பட்டினம் டு வாஷிங்டன்: எளிய பெண்ணின் சாதனைப் பயணம்...

19

பரமக்குடியில் இருந்து முதுகுளத்தூர் செல்லும் சாலை. பச்சையைப் பார்க்க முடியவில்லை. சாலையின் இருபுறமும் பொட்டல்காடு. கிட்டத்தட்ட விவசாயம் செத்துவிட்டது. உழுது கிடக்கும் நிலங்களில் உப்பு பூத்து வெளறிப்போயிருக்கின்றன. மினி பேருந்து நிற்கிறது. இறங்கும்போது “அப்படியே மேக்கால போனீங்கன்னா பத்து நிமிஷத்துல ஊர் வந்துடும்” என்கிறார் கிராமத்துப் பெரியவர் ஒருவர். மேற்கில் சென்றுக்கொண்டேயிருக்கிறேன். முட்காடுகள், கள்ளிச் செடிகள் என பாலைபோல நீள்கிறது பொட்டல்வெளி. கிராமத்துப் பாஷையில் பத்து நிமிடம் எனில் அரை மணி நேரம் என்று கணக்கு வைத்துக்கொள்ள வேண்டும்போல. பிழை அவர்கள் மீது இல்லை. அவர்களின் நடை அப்படி. விறுவிறுவென நடந்துவிடுவார்கள். நகரங்களைப் போல பக்கத்து வீதிக்குச் செல்ல பைக்கை உதைப்பதில்லை. சட்டென உள்வாங்குகிறது கிராமத்து இணைப்புச் சாலை ஒன்று. நுழைந்தோம். வயல் வரப்புகள் சூழ பாலைவனச் சோலை ஒன்று வரவேற்கிறது. அது மைக்கேல்பட்டினம் கிராமப் பஞ்சாயத்து!

ஊருக்குள் நுழைகிறோம். மையமாக அவ்வளவு பெரிய ஊருணி. ஒரு பெரிய கால்பந்து மைதானம்போல விரிந்திருக்கிறது அது. நடுவே இரண்டு குளங்கள். வறட்சியால் ஊருணி நிரம்பாதபோதும் குளங்களில் தண்ணீர் எட்டிப் பார்க்கிறது. அருகே ஒரு தேவாலயம். வரிசையாக ஏழெட்டுத் தெருக்கள். இதென்ன ஆச்சர்யம், ஒவ்வொரு வீட்டில் இருந்து சொல்லி வைத்ததுபோல பிளாஸ்டிக் குழாய்கள் கூரையில் இருந்து கீழ் இறங்குகின்றன. இப்படி எங்கேயும் பார்த்ததில்லை. எங்கே செல்கின்றன அவை?


சேலை தலைப்பில் கையைத் துடைத்துக் கொண்டே வரவேற்கிறார் ஜேசுமேரி. மைக்கேல்பட்டினம் பஞ்சாயத் துத் தலைவர். எளிமையான தோற்றம்.

“பொறுத்துக்கிடுங்க தம்பி! சமையல் முடிக்க நேரமாயிட்டு. என்கிட்ட வண்டி எதுவும் கெடையாது. ஊருக்குள்ள எல்லாரும் வெவசாயத்துக்குப் போயிட்டாங்க. ரொம்ப தூரம் நடந்துட்டிங்களா..?” வாஞ்சையான வார்த்தைகளால் பறந்தோடியது களைப்பு.

என் கண்கள் வீடுகளில் இருந்து இறங்கும் குழாய்களை மேய்ந்துக்கொண்டிருந்தன. “என்ன தம்பி அப்பிடி பாக்குறீங்க? மழை நீர் சேகரிப்பு தொழில்நுட்பம் தம்பி. நம்ம கவர்மெண்ட் ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடியே ஆரம்பிச்ச ஊராக்கும் இது. சொல்லப்போனா வீடுகள் மூலம் மழை நீர் சேகரிச்சதுல இந்தியாவுக்கே எங்க கிராமம்தான் முன்னோடி” என்கிறார். ஆம், நினைவு வருகிறது. முதன்முதலில் அதிமுக ஆட்சியின்போது முதல்வர் ஜெயலலிதா மழை நீர் சேகரிப்பு குறித்து விரிவான ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தார். அதில் மழை நீரை சேகரிப்பதால் ஏற்படும் நன்மைகளைக் குறிப்பிட்டிருந்தவர், ‘‘ஏன் நமது மாநிலத்திலேயே முதன்முறையாக ஒரு கிராமப் பஞ்சாயத்துத் தலைவி இதனை சிறப்பாக செய்திருக்கிறார்’’ என்று பெயர் சொல்லாமல் குறிப்பிட்டார். அந்தப் பஞ்சாயத்துதான் மைக்கேல்பட்டினம்!

தெருக்களில் நடந்தோம். “ஒவ்வொரு வீட்டிலும் மழை நீர் சேகரிப்புத் திட்டம் கட்டாயம். ஆனா, மக்களுக்கு செலவு வைக்கலை. கிராமப் பஞ்சாயத்து சார்பில் அஞ்சு லட்சம் ரூபாய் மதிப்பில் அத்தனை வீடுகளிலும் தகர உறை போட்டு, அதில் இருந்து மழை தண்ணீரை பிளாஸ்டிக் குழாய் மூலம் பூமிக்குள் விடுகிறோம். அது நிலத் தடிக்கு போகாது. இங்கிருக்கிற ஒவ்வொரு தெருவுக்கும் அடியிலும் பெரிய சிமெண்ட் குழாய் புதைச்சிருக்கோம். அந்தக் குழாய்கள் எல்லாம் ஊருணியில போய் முடியுது. ஒரு மழை பெய்ஞ்சா போதும் உள்ளே இருக்குற குளங்கள்ல தண்ணீர் நெறைஞ்சிடும். என்னமோ தெரியலை, இந்த வருஷம் இன்னும் மழையில்லை. இல்லைன்னா ஊருணியே நெறைச்சிட்டுருக்கும். ஆனாலும் பிழையில்லாம வருஷம் முழுசுட்டும் குளங்கள்ல தண்ணிக் கிடக்கு. 20 வருஷத்துல எங்க கிராமத்துல மட்டும் குடி தண்ணீருக்கு பஞ்சம் வந்தது கெடையாது” என்கிறார்.

வீடுகளில் சேகரமாகும் மழை நீர் மட்டு மல்லாமல், சுற்றுவட்டாரத்தில் எங்கு மழை பெய்தாலும் அவை துளியும் வீணாகாமல் ஊரு ணிக்கு தண்ணீர் வரும் வகையில் சிறு ஓடை கள் மற்றும் கால்வாய்களை அமைத்திருக் கிறார்கள். 20 வருஷத்துக்கு முன்னாடி எப்படி இப்படி யோசனை வந்தது ஜேசு மேரிக்கு?

“1996-க்கு முன்னாடி ஊருக்குள்ள கடுமையான குடிநீர் பஞ்சம். 96-ல் நான் தலைவரா போட்டியின்றி தேர்வானேன். (இன்றுவரை தொடர்கிறார்) இதோ இந்த ஊருணி பூரா முள்ளுக்காடா கிடக்கும். எங்க பொம்பளையாளுங்களுக்கு ஒவ்வொரு நாளும் விடிஞ்சா பகீர்ன்னுட்டிருக்கும். குடித் தண்ணிக்கு அஞ்சாறு மைல் நடக்கணுமே. அப்படி நடந்தோமுன்னா அங்ஙன ஒரு கேணி யில சேறும் உப்புமா தண்ணி கலங்கிக் கிடக்கும். இப்பிடியா மகிண்டி, சுவாத்தன்பட்டி, முத்துராமலிங்கபுரம்பட்டி, சாம்பக்குளம்னு நெதம் ஒரு ஊரு போவோம். ஏன்னா முதல் நாளு எடுத்த கேணியில மறுநாளு தண்ணி இருக்காது. நானும் ஊர் பொம்பளைங்களோட குடத்தை தூக்கிட்டு நடப்பேன். அங்ஙனயா கூட்டம் முட்டி மோதும். நாலு ஊருப் பொம்பளையாளுங்க சேருவாங்களா. சண்டை நாறும். அப்படி கொண்டாந்த தண்ணியை தேத்தாங்கொட்டையைப் போட்டு சலிச்சோமுன்னா மதியமாகிடும். அப்புறம்தான் சோறு, தண்ணி எல்லாம்.

நாம ஊர் தலைவரா இருந்து என்ன பிரயோசனமுன்னு யோசிச்சப்பதான் இந்த ஐடியா தோணுட்டு. மழை வந்தா என்ன பண்ணுவோம்... முதல் வேலையா அண்டா, குண்டா எல்லாத்தையும் கூரைக்குக் கீழே வைப்போம். கணிசமான வீட்டுக் கூரைக்கு கீழே தகரத்தை வெட்டி கட்டியிருப்போம். அதுல சேகரமான தண்ணியைதான் குடிச்சோம். குளிச்சோம். துணி தொவைச்சோம். அதையே கொஞ்சம் மாத்தி யோசிச்சேன். அம்புட்டுதான். அப்ப தெருக்கள் அடியில மழை நீரை சேகரிக்க சிமெண்ட் குழாய் பதிக்கலை. ஒவ்வொரு தெரு முனையிலும் தொட்டியை வெச்சி தண்ணி பிடிச்சோம்.

இந்தத் திட்டத்தைப் பார்த்துட்டு சிறந்த பஞ்சாயத்துத் தலைவரா என்னை அரசாங்கம் தேர்வு செஞ்சுது. அப்போ கலெக்டரு அஞ்சு லட்சம் ரூபாய் எங்க கிராமப் பஞ்சாயத்துக்கு பரிசு கொடுத்தார். அந்தப் பணத்தை என்ன பண்ணலாம்னு யோசிப்பதான், இந்த ஊருணியைத் தூர்வார முடிவு பண்ணோம். ஆறு மாசத்துல ஊரே ஒண்ணுகூடி ஊருணியில இருந்த மொத்த சீமைக்கருவேல மரங்களையும் வேரோட பிடுங்கி எறிஞ்சோம். ஆழமா தூர் வாரினதோட நிக்காம உள்ளே ரெண்டு குளங்களையும் வெட்டினோம். சுத்துசுவர், படித்துறை எல்லாம் கட்டினோம். அப்ப தெருக்களில் எல்லாம் கான்கீரிட் சாலையை மாத்திக்கிட்டிருந்தோம். அப்படியே ஒரு யோசனை தோணுச்சு. உடனே பெரிய சிமெண்ட் குழாய்களை வாங்கியாந்து ஒவ்வொரு தெருவுக்கு நடுவுலயும் புதைச்சு எல்லாம் வீட்டு பிளாஸ்டிக் குழாய் தண்ணீரையும் அதுல போகிற மாதிரி செஞ்சிட்டோம். இப்படி ஊர் முழுக்க பத்து இடங்களில் சேகரமாகும் தண்ணி ஊருணிக்குப் போகுது” என்கிறார். ஊருணியில் தண்ணீர் நிறைந்ததால் விவசாயமும் செழித்தது. இன்றும் இங்கு ஏக்கருக்கு நூறு மூட்டை மிளகாய் சாகுபடி எடுக்கிறார்கள். நெல்லும் விளைகிறது. ஊருணி நிரம்பியது அந்தக் காலகட்டத்தில் அதிசயமாகப் பார்க்கப்பட்டது. தகவல் காட்டுத் தீ போல பரவியதால் சுற்றுவட்டாரங்களில் இருந்து மக்கள் கூட்டம் கூட்டமாக வந்துப் பார்த்தார்கள். மத்திய அரசு, மாநில அரசுகளின் விருதுகள் குவிந்தன. விஷயம் வாஷிங்டனில் இருக்கும் உலக வங்கி வரைச் சென்றது. அந்த சமயம் உலகம் முழுவதும் இருந்த சிறந்த உள்ளாட்சித் தலைவர்களைத் தேர்வு செய்துகொண்டிருந்தது உலக வங்கி. உடனே அந்தக் குழுவினர் இங்கே விரைந்தார்கள். திட்டத்தைப் பற்றி கேட்டறிந்தார்கள். வாஷிங்டனுக்குத் திரும்பினார்கள். சில நாட்களிலேயே வந்தது அந்த அறிவிப்பு. உலகம் முழுவதும் தேர்வு செய்யப்பட்ட 40 சிறந்த உள்ளாட்சிப் பிரதிநிதிகளில் இந்தியாவுக்கான பிரதிநிதியாகத் தேர்வு செய்யப்பட்டிருந்தார் ஜேசு மேரி!

2003-ம் ஆண்டு, அன்றைய ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியராக இருந்த விஜயகுமாருடன் வாஷிங்டன் பறந்தார் ஜேசுமேரி. உலகம் முழுவதும் இருந்து வந்திருந்த உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மற்றும் உலக வங்கியின் நீர் மேலாண்மை திட்டக் குழுவினருக்கு நீர் மேலாண்மை குறித்து தமிழில் பாடம் எடுத்தார் ஜேசு மேரி. அதை மொழிபெயர்த்தார் ஆட்சியர்.

“வாஷிங்டனில் என்ன பேசினீர்கள்?” என்று கேட்டேன். “மாரித்தாயை விட உலகத் துல சுத்தமானது வேறெதுவும் கிடையாது. அதனால மழைத் தண்ணீ கூரையில விழுந்தா அதை வீணாக்காமல் குடத்துல பிடிங்க...”ன்னு பேசினேன். பெரிய ஹாஸ்யத்தை சொன்னதுபோல கலகலவென வெடித்துச் சிரிக்கிறார் ஜேசுமேரி.

மின்னல் வெட்டி மழை கொட்டத் தொடங்குகிறது. ஊருணி கரையில் இருந்த நாங்கள் எழுந்துச் செல்ல மனமின்றி நனையத் தொடங்குகிறோம்.

- பயணம் தொடரும்...

ஜேசுமேரி

தவறவிடாதீர்!  உள்ளாட்சிஉங்கள் உள்ளங்கள்ஆட்சிதேர்தல்ஓட்டுகிராம சபைகள்

  Sign up to receive our newsletter in your inbox every day!

  You May Like

  More From This Category

  More From this Author

  x