Published : 08 Aug 2022 07:36 PM
Last Updated : 08 Aug 2022 07:36 PM

ஒட்டன்சத்திர நீர் திட்டத்துக்கு எதிர்ப்பு: பல்லடம் பொதுப்பணித் துறை அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள்

திருப்பூர்: ஒட்டன்சத்திரத்துக்கு பிஏபி தண்ணீர் திட்டம் ரத்து செய்யக்கோரி விவசாயிகள் பொதுப் பணித்துறை அலுவலகம் முற்றுகையில் ஈடுபட்டனர்.

ஒட்டன்சத்திரத்துக்கு பிஏபி தண்ணீரை கொண்டு செல்லும் திட்டத்தை ஒரு மாதத்துக்குள் ரத்து செய்யவில்லை என்றால், பொள்ளாச்சி பிஏபி அலுவலகத்தில் கோரிக்கை நிறைவேறும் வரை, உள்ளிருப்பு போராட்டம் நடத்தப்படும் என விவசாயிகள் அறிவித்தனர்.

பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்டத்தின்(பிஏபி) தொகுப்பு அணைகளில் ஒன்றான ஆழியாறு அணையிலிருந்து 120 கி.மீ தொலைவில் உள்ள திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்துக்கு தண்ணீர் எடுக்கும் திட்டத்துக்கான அரசாணையை ரத்து செய்ய வலியுறுத்தி விவசாயிகள் போராடி வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக, ஆனைமலையாறு நல்லாறு தண்ணீருக்கான இயக்கம், கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் மற்றும் ஏர்முனை இளைஞர் அணி சார்பில் பல்லடம் பொதுப்பணித்துறை அலுவலகத்தை இன்று ஆயிரக்கணக்கான விவசாயிகள் முற்றுகையிட்டனர்.

கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தின் செயல் தலைவர் என்.எஸ்.பி. வெற்றி தலைமை வகித்தார். மாநிலத் தலைவர் ஏ.கே.சண்முகம், துணைத்தலைவர் சண்முகசுந்தரம், மாவட்ட தலைவர் ஈஸ்வரன், ஒருங்கிணைப்பாளர் தங்கவேல் உட்பட பலர் பங்கேற்றனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பேசியது: “ஏற்கெனவே கடும் தண்ணீர் பற்றாக்குறையால், ஆயக்கட்டு விவசாயிகளுக்கே முறையாக தண்ணீர் அளிக்க முடியாமல் பிஏபி பாசனத் திட்டம் திணறி வருகிறது. இந்நிலையில், எந்தவித முன்னறிவிப்பும் இன்றி, விவசாயிகளின் கருத்துகளை கேட்காமல் ஒருதலைப்பட்சமான பின்விளைவுகளை சிறிதும் சிந்திக்காமல், ஒட்டன்சத்திரத்துக்கு 1 டிஎம்சி தண்ணீரை எடுக்கும் திட்டத்தை தமிழக அரசு அறிவித்தது. அதற்கான அரசாணையையும் வெளியிட்டது.

நவீன விஞ்ஞானம் இல்லாத அந்தக் காலகட்டத்தில், பல சான்றோர்களின் உதவியால் தொலைநோக்கு திட்டத்தோடு, பிஏபி திட்டம் உருவாக்கப்பட்டது. இதில் பாசன விவசாயிகளுக்கு முறையாக தண்ணீர் கிடைக்க செய்வதை விட்டுவிட்டு, அதற்கு நேர்மாறாக இந்தத் திட்டத்தை மேலும் சீரழிக்கும் வேலையை தமிழக அரசு செய்கிறது.

ஆனைமலையாறு- நல்லாறு அணை திட்டங்களை கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாக கட்டாமல் கிடப்பில் போட்டுள்ள தமிழக அரசுக்கு, தண்ணீர் பற்றாக்குறையால் திணறி வரும் பிஏபி தண்ணீரை எப்படி சம்பந்தமின்றி, ஒட்டன்சத்திரத்திற்கு கொண்டு செல்லும் எண்ணம் வந்தது என்பது வியப்பாக உள்ளது. இன்னும் ஒரு மாதத்துக்குள் இந்த திட்டத்தை ரத்து செய்யவில்லை என்றால், பொள்ளாச்சி பிஏபி அலுவலகத்தில் கோரிக்கை நிறைவேறும் வரை, உள்ளிருப்பு போராட்டம் நடத்தப்படும்” என்றனர்.

இறுதியாக பல்லடம் பொதுப்பணித்துறை அலுவலர், பல்லடம் வட்டாட்சியர், திருப்பூர் மாவட்ட ஆட்சியர் ஆகியோருக்கு நேரடியாகவும், முதலமைச்சர் தனிப்பிரிவு, தலைமை நிலைய செயலாளர், பொதுப்பணித்துறை அமைச்சர் ஆகியோருக்கு திட்டத்தை ரத்து செய்யக் கோரி பதிவுத் தபால் மூலமாகவும் மனு அளிக்கப்பட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x