

சென்னை: “மின்சார திருத்த சட்ட மசோதாவானது நிலைக் குழுவிற்கு பரிந்துரைக்கப்பட்டதற்கு திமுகதான் காரணம்” என்று அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்தார்.
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் மின்சாரத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, மின்சார திருத்த சட்ட மசோதா குறித்து செய்தியாளர்களிடம் பேசுகையில், "நாடாளுமன்றத்தில் இன்று (ஆகஸ்ட் 8) கொண்டு வரப்பட்ட மின்சார திருத்த சட்ட மசோதாவிற்கு முதல்வர் தொடர்ந்து எதிர்ப்புக் குரலை பதிவு செய்து வருகிறார். ஏழை மக்களை இந்த மசோதா பாதிக்கும்.
திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு தலைவர் டி.ஆர் பாலு கடுமையாக மசோதாவை எதிர்த்து திமுகவின் குரலைப் பதிவு செய்தார். இந்த சட்ட மசோதா நிறைவேறினால் தனியார் துறைகள், மாநில அரசின் மின்சார கட்டமைப்பை இலவசமாக பயன்படுத்திக்கொள்வார்கள்.
1 லட்சத்து 59 ஆயிரம் கோடி ரூபாய் கடன் பெற்று ஏற்படுத்திய தமிழ்நாடு அரசின் கட்டமைப்பை தனியார் துறை பெற்றுக்கொள்ளும் வகையில் இந்த மசோதா உள்ளது. விவசாயிகளுக்கு வழங்கும் மின்சாரம், 100 யூனிட் இலவச மின்சாரம், விசைத்தறி பயன்படுத்துவோருக்கு வழங்கும் மின்சாரம், குடிசையில் வசிப்போருக்கு வழங்கும் இலவச மின்சாரம் என அனைத்தும் இந்த மசோதாவால் பாதிக்கப்படும்.
மாநிலங்களுக்கு போடப்படும் அபராதத் தொகை 100 மடங்கு உயர்த்தப்பட உள்ளது. ஏழை மக்களுக்கு இலவச மின்சாரம் வழங்கும் திட்டம் மாற்றி அமைக்கும் வகையில் மசோதா உள்ளது. மின்சார திருத்த சட்ட மசோதாவிற்கு அதிமுக, பாஜக இதுவரை எந்த எதிர்ப்பு குரலையோ, ஆர்ப்பாட்டமோ நடத்தவில்லை. மின்சார திருத்த சட்ட மசோதாவானது நிலைக்குழுவிற்கு பரிந்துரைக்கப்பட்டதற்கு காரணமே திமுகதான். நிச்சயம் மின்சாரத் துறையை தனியார் மயமாக்கும் முயற்சிதான் இது.
இந்த சட்ட மசோதாவை எதிர்த்து திமுக தொடர்ந்து முழு குரல் எழுப்பும். மாநில அரசிற்கும், மின்சார வாரியத்திற்கும் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால் எந்த அதிகாரமும் இருக்காது. மின்சாரத் துறையை முழு தனியார் மயமாக்கும் முயற்சியில் ஒன்றிய பாஜக அரசு ஈடுபட்டுள்ளது.
விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும் என எந்த சரத்தும் மசோதாவில் இடம்பெறவில்லை. சொந்த காசில் ஒருவர் கார் வாங்கினால், அதை டீசல் அடித்து இன்னொருவர் ஓட்டிச் செல்கிறேன் என்ற சொல்லும் போக்கு இது. முதல்வர் இந்த மசோதா தொடர்பாக அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வார்" அவர் கூறினார்.