

நாட்டின் 75-வது சுதந்திர தினத்தையொட்டி இந்து மக்கள் கட்சி நடத்தி வரும் வந்தே மாதரம் யாத்திரை நேற்று மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழிக்கு வந்தது. சீர்காழி, கொள்ளிடம் பகுதிகளில் நடைபெற்ற யாத்திரையில் அர்ஜூன் சம்பத் பேசினார். சீர்காழியில் செய்தியாளர்களிடம் அவர் கூறியது:
சமூக வலைதளங்களில் தேசியக் கொடியை முகப்புப் படமாக வைக்குமாறு பிரதமர் அறிவுறுத்திய நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின், மறைந்த முதல்வர் கருணாநிதி தேசியக் கொடியேற்றிய படத்தை வைத்துள்ளார். இது, தவறான முன்னுதாரணம். தமிழ்நாடு தினத்தைக் கொண்டாடுவதில் அதிக அக்கறை செலுத்திய தமிழக அரசு, நாட்டின் 75-வது சுதந்திர தினக் கொண்டாட்டத்தில் அக்கறை செலுத்தாமல் உள்ளது. 75-வது சுதந்திர தின விழாவை அரசு விழாவாக முதல்வர் நடத்த வேண்டும்.
ஓராண்டு கால திமுக ஆட்சியில் ஊழல் பெருகியுள்ளது. சட்டம்- ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. 40 மக்களவை உறுப்பினர்களால் எவ்வித பயனும் இல்லை. நாடாளுமன்றத்தில் எப்போதும் மத்திய அரசுடன் மோதல் போக்குடன் நடந்து கொள்வதுடன், தமிழகத்தின் வளர்ச்சிக்காக எந்தக் குரலும் எழுப்பவில்லை என்றார்.
செய்தியாளர் சந்திப்பின்போது, இந்து மக்கள் கட்சி மாநிலச் செயலாளர் கொள்ளிடம் ஜெ.சுவாமிநாதன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.