

சென்னை: தமிழகம் முழுவதும் 50 ஆயிரம் இடங்களில் நடந்த 33-வது சிறப்பு மெகா முகாமில் 16.86 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டது. சென்னையில் மட்டும் 2 ஆயிரம் இடங்களில் முகாம் அமைத்து தடுப்பூசி போடப்பட்டது.
இந்தியாவில் கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, தடுப்பூசி போடும் பணி கடந்த2021 ஜனவரி 16-ம் தேதி தொடங்கியது. தற்போது 12 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்படுகிறது. 2 தவணைதடுப்பூசி போட்டு 6 மாதம் நிறைவடைந்தவர்களுக்கு பூஸ்டர் தவணை தடுப்பூசியும் போடப்படுகிறது.
தமிழகத்தில் அனைவருக்கும் விரைவாக தடுப்பூசி செலுத்தும் வகையில், இதுவரை 32 மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில், 33-வது மெகா தடுப்பூசி முகாம் தமிழகம் முழுவதும் 50 ஆயிரம் இடங்களில் நேற்று நடைபெற்றது.
அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையம், துணை சுகாதார நிலையம், பள்ளி, ஊராட்சி, நகராட்சி அலுவலகம், பேருந்து நிலையம், ரயில் நிலையம் என பொதுமக்கள் அதிகம் கூடும் அனைத்து இடங்களிலும் முகாம்கள் அமைக்கப்பட்டிருந்தன. சென்னையில் மட்டும் 2 ஆயிரம் இடங்களில் முகாம் அமைத்து கரோனாதடுப்பூசி போடப்பட்டது.
பொதுமக்கள் ஆர்வம்
காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை நடந்த முகாமில் பொதுமக்கள் ஆர்வமாக வந்து தடுப்பூசி போட்டுக்கொண்டனர். தமிழகம் முழுவதும் நடைபெற்ற மெகா முகாமில் மொத்தம் 16.86 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டது.
சென்னை மயிலாப்பூர் காரணீஸ்வரர் பகோடா தெருவில் உள்ள மாநகராட்சி சமுதாய நலக்கூடத்தில் நடந்த முகாமை சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பார்வையிட்டார். சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, துணை மேயர் மு.மகேஷ்குமார், சுகாதாரத் துறை செயலர் செந்தில்குமார், பொது சுகாதாரம், நோய் தடுப்பு மருத்துவத் துறை இயக்குநர் செல்வவிநாயகம், த.வேலு எம்எல்ஏ ஆகியோர் உடன் இருந்தனர்.
மையங்கள் இன்று செயல்படாது
கரோனா தடுப்பூசி முகாம் பணியில் ஈடுபட்ட சுகாதாரப் பணியாளர்களுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால், வழக்கமான தடுப்பூசி மையங்கள் செயல்படாது. அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் தடுப்பூசி போடும் பணி வழக்கம்போல நடைபெறும் என்று சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.