

சென்னை: முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 4-ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி அவரது நினைவிடத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். முன்னதாக, முதல்வர் தலைமையில் நடந்த அமைதிப் பேரணியில் அமைச்சர்கள், திமுகநிர்வாகிகள் உள்ளிட்ட பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
திமுக தலைவராக 50 ஆண்டுகளுக்கும்மேல் பணியாற்றியவரும், 5 முறை தமிழக முதல்வராக பதவி வகித்தவருமான கருணாநிதி, கடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்ட் 7-ம் தேதி உடல்நலக்குறைவால் காலமானார். அவரது உடல், மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிட வளாகத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. கடந்த 2019-ல் அவரது முதலாம் ஆண்டு நினைவுதினம் அனுசரிக்கப்பட்டது. அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் அமைதிப் பேரணியாக சென்று, கருணாநிதி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர். அதன்பின், 2 ஆண்டுகள் கரோனா காரணமாக அமைதிப் பேரணி ரத்து செய்யப்பட்டது.
தற்போது திமுக ஆட்சிப்பொறுப்பேற்றுள்ள நிலையில், கருணாநிதியின் 4-ம் ஆண்டுநினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் அமைதிப் பேரணி நடத்தினர். சென்னை ஓமந்தூரார் தோட்டவளாகத்தில் உள்ள கருணாநிதியின் சிலை அருகில் இருந்து நேற்று காலை அமைதிப் பேரணி புறப்பட்டது.
இதில் பங்கேற்பதற்காக வந்தமுதல்வர் ஸ்டாலின், கருணாநிதி சிலைக்குகீழ் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். அதைத் தொடர்ந்து பேரணி தொடங்கியது. ஸ்டாலினுடன் கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, பொன்முடி, எ.வ.வேலு உள்ளிட்ட அமைச்சர்கள், கனிமொழி உள்ளிட்ட எம்.பி.க்கள், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட எம்எல்ஏக்கள்,முதல்வரின் சகோதரர் மு.க.தமிழரசுமற்றும் திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் என பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். பலர் கருப்புச் சட்டை அணிந்திருந்தனர். அமைதிப் பேரணி காரணமாக அண்ணா சாலை, வாலாஜா சாலை,காமராஜர் சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருந்தது.
மெரினா கடற்கரையை பேரணி அடைந்ததும், முதலில் அண்ணா நினைவிடத்தில் முதல்வர் மலர்கள் தூவி மரியாதை செலுத்தினார். அதைத் தொடர்ந்து, கருணாநிதி நினைவிடத்தில் முதல்வர் ஸ்டாலின் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அவருடன் திமுக பொதுச்செயலாளரும் அமைச்சருமான துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி. உள்ளிட்டோருடன் அஞ்சலி செலுத்தினர். கருணாநிதியின் குடும்பத்தினரும் அஞ்சலி செலுத்தினர்.
அறிவாலயத்தில்...
அங்கிருந்து திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயம் சென்ற முதல்வர், அங்கு கருணாநிதியின் சிலைக்கு கீழ் வைக்கப்பட்டிருந்த அவரது படத்துக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். பின்னர், மாற்றுத் திறனாளிகளுக்கு கூடுதல் சக்கரம் பொருத்தப்பட்ட வாகனங்கள், திருநங்கைகளுக்கு நலத்திட்ட உதவிகள், பெண்களுக்கு தையல் இயந்திரம், ஆண்களுக்கு இஸ்திரி பெட்டி உள்ளிட்ட நலத் திட்ட உதவிகளை முதல்வர் வழங்கினார்.
அதைத் தொடர்ந்து, திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலி அலுவலகத்துக்கு முதல்வர் சென்றார். அங்கும் கருணாநிதி படத்துக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். கருணாநிதியின் 4-ம் ஆண்டு நினைவு நாளையொட்டி, முரசொலி சார்பில் தயாரிக்கப்பட்ட ‘நினைவில் வாழும் கலைஞர்’ என்ற சிறப்பு மலரை பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட, முரசொலி செல்வம் பெற்றுக்கொண்டார்.
மேலும், கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதியின் இல்லத்துக்கும், சிஐடி நகர் இல்லத்துக்கும் சென்று அங்கும் அவரது படத்துக்கு முதல்வர் அஞ்சலி செலுத்தினார்.
தமிழகம் முழுவதும் அனைத்து பகுதிகளிலும் மக்கள் கூடும் பகுதிகள், மாநகரின் முக்கிய பகுதிகள், கிராமப்புறங்களிலும் திமுக நிர்வாகிகள், கருணாநிதியின் படத்தைமலர்களால் அலங்கரித்து வைத்துஅஞ்சலி செலுத்தினர். பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினர்.
டெல்லியில் அஞ்சலி
டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் கருணாநிதி படத்துக்கு தமிழக அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். அப்போது, தமிழ்நாடு இல்லத்தின் தலைமை உள்ளுறை ஆணையர் அதுல்ய மிஸ்ரா உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்
முதல்வர் ஸ்டாலின் நேற்று வெளியிட்ட ட்விட்டர் பதிவில், ‘மூத்த தமிழகத்தின் முத்தான தனிநிகர்தலைவரே, உங்கள் நினைவு நாள்இன்று. உங்களை நாங்கள் மறந்த நாள் என்று? நிழலாய் இருந்து வழிநடத்திக் கொண்டிருக்கிறீர்கள் என்ற மனத் துணிச்சலோடுதான் கட்சியையும் ஆட்சியையும் என்தோளில் சுமந்து கொண்டிருக்கிறேன். உங்கள் விழியின் ஒளியில் பயணத்தை தொடர்கிறோம். உங்கள் வழியில்தான் எங்கள் கால்கள் செல்கின்றன. ‘உடன்பிறப்பே’ என்ற உயிர்ச் சொல்லில் நாங்கள் உயிர் வாழ்கிறோம். கலைஞரே வாழ்க... தலைவரே வாழ்த்துக’ என பதிவிட்டுள்ளார்.
வைகோ அஞ்சலி
கருணாநிதியின் 4-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, அவரது நினைவிடத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மலரஞ்சலி செலுத்தினார். அவரது மகன் துரை வையாபுரி, மல்லை சத்யா உள்ளிட்டோரும் இதில் பங்கேற்றனர்.