Published : 08 Aug 2022 07:56 AM
Last Updated : 08 Aug 2022 07:56 AM
சென்னை: அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடி வரை உயர்த்திக் கொள்ளலாம் என்றும், அணையை பலப்படுத்திய பின்னர்நீர்மட்டத்தை 152 அடி வரை உயர்த்திக் கொள்ளலாம் என்றும்2006-ல் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. 2014-ல் வழங்கிய தீர்ப்பிலும் உச்ச நீதிமன்றம் இதை உறுதி செய்திருந்தது.
தற்போது தொடர் மழையால் முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 137.50 அடியை எட்டியுள்ளது. அணைக்கு அதிக நீர்வரத்து உள்ளதால், அணையின் நீர்மட்டம் திடீரென உயர வாய்ப்புள்ளது.
எனவே, நீர்மட்டத்தை படிப்படியாக குறைக்க வேண்டும் என்றும், நீர்வரத்தைவிட அதிக தண்ணீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தமிழக முதல்வருக்கு, கேரள முதல்வர் கடிதம் எழுதியுள்ளார்.
இதையடுத்து தமிழக அரசும்,விவசாயிகளை கலந்து ஆலோசிக்காமல், முல்லை பெரியாறு அணையிலிருந்து விநாடிக்கு 534 கனஅடி நீரை கேரளப் பகுதிக்கு திறந்து விட்டுள்ளதாக பத்திரிகைகளில் செய்திகள் வந்துள்ளன.
முல்லை பெரியாறு அணையால் பயனடைந்துவரும் மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள், முல்லை பெரியாறு அணையில் 142 அடி வரை தண்ணீரைத் தேக்காததற்கு ‘ரூல் கர்வ்’ என்ற விதிதான் காரணம் என்றும், இதனால் ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களுக்கு தண்ணீர் சென்றடையாத சூழ்நிலை உள்ளதாகவும், அங்கு கடும்வறட்சி ஏற்படும் சூழல் உருவாகியுள்ளதாகவும் கூறுகின்றனர்.
ரூல் கர்வ் விதிக்கு விவசாய சங்கங்களும் கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளன. தற்போது ‘ரூல் கர்வ்' விதிப்படி முல்லை பெரியாறு அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்படுவதாக கூறப்படுகிறது. இதற்கு தமிழக அரசு எப்போது அனுமதி அளித்தது? யாரால் அனுமதி அளிக்கப்பட்டது? இந்த விதிதொடர்பாக மக்களுக்கு அரசுவிளக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
எனவே, இந்த விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலின் தலையிட்டு, ‘ரூல் கர்வ்’ விதி குறித்து மக்களுக்கும், விவசாயிகளுக்கும் எடுத்துரைக்க வேண்டும். ரூல் கர்வ் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்த விதிப்படி முல்லை பெரியாறு அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்படுவதைக் கண்டித்து அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு அறிக்கையில் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித் துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT