Published : 08 Aug 2022 07:25 AM
Last Updated : 08 Aug 2022 07:25 AM
சென்னை: தமிழக கைத்தறி ஆடைகளுக்கு தேசிய அளவில் முக்கியத்துவம் இருப்பதாக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
தேசிய கைத்தறி தினத்தையொட்டி அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது: நமது நாகரிகத்தின் அங்கமான கைத்தறி ஆடைகள், சுதந்திரப் போராட்டத்தின் முக்கியப் பகுதியாகும். நமது கலாச்சார அடையாளத்தைப் பாதுகாத்து வரும் தமிழக நெசவாளர்களுக்கு வாழ்த்துகள்.
20-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில், காலனி ஆதிக்கம் உச்சத்தில் இருந்தபோது இந்திய சுதந்திரப் போராட்ட வீரர்கள் சுதேசி இயக்கத்துக்கு அழைப்பு விடுத்தனர். இது நாட்டில் உள்ள அனைவரையும் ஒருங்கிணைத்தது.
பிரதமர் நரேந்திர மோடி ஆகஸ்ட்7-ம் தேதியை தேசிய கைத்தறிநாளாக 2015-ல் அறிவித்தார். நாட்டின் முன்னேற்றத்தில் பங்களிக்கும் கைத்தறி நெசவாளர்களைக் கொண்டாடுவதற்கான நாள் இதுவாகும். தமிழக கைத்தறி ஆடைகளுக்கு தேசிய அளவில் முக்கியத்துவம் இருக்கிறது.
2019-20-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி தமிழகத்தில் 2.43 லட்சம் கைத்தறி நெசவாளர்கள் மற்றும் இதர பணியாளர்கள் உள்ளனர். இந்த எண்ணிக்கை தென் மாநிலங்களில் முதலிடத்தையும், தேசிய அளவில் 3-வது இடத்தையும் தமிழகத்துக்குப் பெற்றுத் தந்துள்ளது.
தமிழக நெசவாளர்களின் கைவினைத் திறன் இணையற்றது. தாம்பரம் அருகேயுள்ள அனகாபுத்தூரைச் சேர்ந்த நெசவாளர்கள், வாழை நாரைக் கொண்டு கைத்தறி சேலைகளை நெய்கின்றனர்.
சர்வதேச சந்தையில்...
சர்வதேச சந்தையில் தமிழக கைத்தறிக்கு அதிக அங்கீகாரம் கிடைக்கிறது. குறிப்பாக, புவிசார் குறியீடு பெற்ற கைத்தறிகளுக்கு அதிக முக்கியத்துவம் கிடைத்துள்ளது. உலகுக்கே முன்னோடியாக இந்தியாவை மாற்றுவதில் கைத்தறிகள் முக்கியப் பங்குவகிக்கும். தேசத்தின் வளர்ச்சிக்காக அனைவரும் பங்களிப்போம்.
இவ்வாறு ஆளுநர் தெரிவித்துள்ளார்.
ரூ.1,000 கோடி இலக்கு
தேசிய கைத்தறி தினத்தையொட்டி, சென்னை எழும்பூர் கோ-ஆப்டெக்ஸ் வளாகத்தில் மெகா பட்டு மேளா மற்றும் ஆடித்தள்ளுபடி விற்பனை கண்காட்சியை கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சர் ஆர்.காந்தி தொடங்கிவைத்தார். தொடர்ந்து, சிறந்த நெசவாளர் மற்றும் வடிவமைப்பாளர்களுக்கு விருதுகள், நிலுவை ஊதியம், கடனுதவி, தறிஉபகரணங்களை வழங்கி அமைச்சர் காந்தி பேசியதாவது:
கடந்த ஆண்டு ரூ.202 கோடிக்குகைத்தறித் துணிகள் விற்பனையாகின. நடப்பாண்டு ரூ.1,000 கோடிக்கு விற்பனை இலக்கு நிர்ணயித்துள்ளோம்.
நெசவுத் துறையில் சிறந்து விளங்கும் 9 பேருக்கு முதல்வர்ஸ்டாலின் இன்று (ஆக.8) பரிசு வழங்குகிறார். கைத்தறி நெசவாளர்களுக்கு அடிப்படைக் கூலி 10 சதவீதம் உயர்வு, கூட்டுறவு சங்க தற்காலிகப் பணியாளர்கள் பணிநிரந்தம், நெசவாளர் குறைதீர் மையம், ரூ.4 லட்சம் மானியத்துடன் வீடுகள், ரூ.5 கோடி செலவில் கைத்தறி அருங்காட்சியகம் உள்ளிட்ட திட்டங்களை திமுக அரசு செயல்படுத்தியுள்ளது. நெசவாளர்களின் வாழ்வாதாரம் சிறக்க மக்கள் அனைவரும் கைத்தறித் துணிகளை அணிய வேண்டும்.
இவ்வாறு அமைச்சர் காந்தி பேசினார்.
இந்நிகழ்ச்சியில், அமைச்சர் பி.கே.சேகர்பாபு, தயாநிதி மாறன்எம்.பி., எம்எல்ஏக்கள் எம்.கே.மோகன், இ.பரந்தாமன், சென்னை துணை மேயர் மு.மகேஷ் குமார், கைத்தறித் துறை செயலர் தர்மேந்திர பிரதாப் யாதவ், ஆணையர் த.பொ.ராஜேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT