

மத்திய, மாநில அரசுகள் தீவிரவாதத்தையும், பயங்கரவாதத்தையும் இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''தென் இந்தியாவில் தமிழகம் மற்றும் கேரள மாநிலத்தில் நேற்றைய முன் தினம் ஐ.எஸ். இயக்கத்தைச் சேர்ந்த 7 பேரை தேசியப் புலனாய்வு அமைப்பின் அதிகாரிகள் கைது செய்தனர். குறிப்பாக கேரளாவில் கண்ணனூர் மற்றும் கோழிக்கோடு மாவட்டங்களிலும், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி கிராமங்களிலும் ஐ.எஸ். தீவிரவாதிகள் ஊடுருவி இருப்பதாக உளவுத் துறைக்கு கிடைத்த தகவல் மூலம் அவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஐ.எஸ். பயங்கரவாதிகளின் நடமாட்டத்தால் தமிழக மற்றும் கேரள எல்லைப் பகுதியில் ஒரு பதற்றமான சூழல் நிலவியுள்ளது. மேலும் கைது செய்யப்பட்டவர்களிடம் நடைபெற்ற விசாரணையில் அவர்கள் ஐ.எஸ். அமைப்பிற்கு ஆள் சேர்ப்பதற்காகவும், சதித்திட்டம் தீட்டி நாச வேலையில் ஈடுபடுவதற்காகவும் கூடியிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
குறிப்பாக இளைஞர்களையும், பெண்களையும் மூளைச் சலவைச் செய்து, அவர்களை சிரியாவுக்கு அழைத்துச் சென்று, தீவிரவாதப் பயிற்சி அளித்து, பிறகு அவர்களை இந்தியாவிற்கு அனுப்பி நாச வேலையில் ஈடுபடுத்த திட்டம் தீட்டியிருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. எனவே தேசியப் புலனாய்வுப் பிரிவு கைது செய்த ஐ.எஸ். இயக்கத்தினரிடம் மேலும் தீவிர விசாரணை நடத்தி அவர்களோடு வேறு யாரேனும் தொடர்பு கொண்டுள்ளனரா என்பதை அறிந்து அவர்களையும் கைது செய்ய வேண்டும்.
ஏற்கெனவே வட இந்தியாவில் எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் ஊடுருவல், அஸ்ஸாமில் போடோ தீவிரவாதிகள், ஒரிசாவில் மாவோயிஸ்ட்கள், ஆந்திராவில் நக்சலைட்கள் போன்று தென் இந்தியாவிலும் தீவிரவாதிகள், பயங்கரவாதிகள் ஊடுருவி உள்ளதால் ஒட்டு மொத்த இந்தியாவின் பாதுகாப்பிற்கே ஆபத்து ஏற்பட்டுள்ளது.
இது போன்று மறைமுகமாக தீவிரவாத, பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடுவோரை பொது மக்களும் அடையாளம் கண்டு, விழிப்புணர்வோடு செயல்பட்டு காவல் துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். மேலும் மத்திய அரசு ஐ.எஸ். இயக்கத்தைச் சேர்ந்தவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி கடும் தண்டனைப் பெற்றுத்தர வேண்டும்.
மத்திய அரசு நாட்டில் எந்த ஒரு பகுதியிலும் பயங்கரவாதமும், தீவிரவாதமும் தலை தூக்காமல் இருப்பதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். மேலும், மக்கள் இயல்பு வாழ்க்கையை அச்சமின்றி வாழ்வதற்கும், இந்திய நாட்டின் பாதுகாப்பிற்கும் தொடர் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
மத்திய, மாநில அரசுகள் குறிப்பாக தேசியப் புலனாய்வுத் துறை, உளவுத்துறை, காவல் துறை ஒருங்கிணைந்து செயல்பட்டு தீவிரவாதத்தையும், பயங்கரவாதத்தையும் இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும்'' என்று வாசன் கூறியுள்ளார்.