

புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் பிரகதாம்பாள் கோயில் தேர் சாய்ந்த விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்றுவந்த மூதாட்டி நேற்று உயிரிழந்தார்.
புதுக்கோட்டை திருக்கோகர்ணம் பிரகதாம்பாள் கோயிலில் ஆடிப்பூர தேரோட்டத் திருவிழா ஜூலை 31-ம் தேதி நடைபெற்றது. அப்போது, அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்மன் எழுந்தருள செய்யப்பட்டு, தேரோட்டம் தொடங்கிய சில விநாடிகளிலேயே தேர் முன்புறமாக சாய்ந்தது.
இதில், அரிமளம் பெருமாள் கோயில் தெருவைச் சேர்ந்த வெங்கடேசன் மனைவி ராஜகுமாரி(61) உட்பட 8 பேர் காயமடைந்தனர்.
இவர்கள் அனைவரும் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரிமருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி ராஜகுமாரி நேற்று உயிரிழந்தார்.
இந்த விபத்து தொடர்பாக கோயிலில் தேர் கட்டும் பணியில் ஈடுபடும் தற்காலிகப் பணியாளர்கள் 2 பேர் மீது திருக்கோகர்ணம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுஉள்ளது.
முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்பேரில், இந்து சமய அறநிலையத் துறையின் கூடுதல் இயக்குநர் கண்ணன் தலைமையிலான குழு விபத்து குறித்து விசாரணை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.