Published : 08 Aug 2022 06:02 AM
Last Updated : 08 Aug 2022 06:02 AM

கலைஞர் நினைவு மாரத்தானில் 43,320 பேர் பங்கேற்பு; வசூலான பதிவுக் கட்டணம் ரூ.1.20 கோடியை அரசு மருத்துவமனைகளுக்கு வழங்கல்

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவு தினத்தையொட்டி, சென்னையில் கலைஞர் நினைவு பன்னாட்டு மாரத்தான் போட்டி நேற்று நடந்தது. பெசன்ட் நகர் ஆல்காட் பள்ளி வளாகத்தில் தொடங்கிய மாரத்தானில் இளைஞர்கள், பெண்கள், சிறுவர்கள் உட்பட 42 ஆயிரம் பேர் பங்கேற்றனர்.

சென்னை: கலைஞர் நினைவு பன்னாட்டு மாரத்தான் போட்டி சென்னையில் நேற்று நடைபெற்றது. திமுக தலைவரும், மறைந்த முன்னாள் முதல்வருமான கருணாநிதியின் 4-ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஏற்பாட்டில் ‘கலைஞர் நினைவு பன்னாட்டு மாரத்தான் ஓட்டம்' சென்னையில் நேற்று நடைபெற்றது.

பெசன்ட் நகரில் உள்ள ஆல்காட் பள்ளி வளாகத்தில் காலையில் நடந்த தொடக்க விழாவில் 5 கிமீ தூரப் போட்டியை திமுக இளைஞர் அணி செயலாளரும், சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதி எம்எல்ஏவுமான உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

10 கிமீ போட்டியை நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு, 21 கிமீ போட்டியை பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு, 42 கிமீ போட்டியை விளையாட்டுத் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

இந்தியாவில் இதுவரை எந்த மாரத்தானிலும் இல்லாத அளவுக்கு 43,320 பேர் பதிவு செய்து பங்கேற்றனர். இதில் 10,985 பேர் பெண்கள் ஆவர்.

இந்த மாரத்தான் ஓட்டத்தில் பதிவுக்கட்டணமாக பெறப்பட்ட ரூ.1 கோடியே 20 லட்சத்து 69,980 தொகையை தமிழக சுகாதாரத் துறை செயலாளர் ப.செந்தில்குமாரிடம் முதல்வர் ஸ்டாலின் ஒப்படைத்தார். தொகை முழுவதையும், எழும்பூர் அரசு குழந்தைகள் மற்றும் தாய் சேய் நல மருத்துவமனைகளுக்கு வழங்கப்பட்டு, ஏழைக் குழந்தைகளின் மருத்துவப் பயன்பாட்டுக்காக இந்நிதி செலவிடப்பட உள்ளது.

மாரத்தான் ஓட்டத்தில் பங்கேற்றஅனைவருக்கும் காலை உணவுவழங்கப்பட்டது. 12 இடங்களில் குடிநீர், தர்ப்பூசணி, சாத்துக்குடி பழச்சாறு மற்றும் வாழைப்பழம் ஆகியவை வழங்கப்பட்டன.

மாரத்தான் போட்டியில் வெற்றி பெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு முதல்வர் பரிசுகளை வழங்கினார். ஆசியாவிலேயே மிகப்பெரிய நினைவு மாரத்தானாக அங்கீகரிக்கப்பட்டதற்கான சான்றிதழை ‘ஆசியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்’ நிறுவன நிர்வாகிகள் முதல்வரிடம் வழங்கினர்.

மாரத்தான் போட்டியில் பதிவுக் கட்டணமாக கிடைத்த தொகை ரூ.1.2 கோடியை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனை, தாய் சேய் நல மருத்துவமனைகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். உடன் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு, சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர்.

5 கிமீ மாரத்தான் போட்டியில் முதல் பரிசு பெற்ற மணிசரத்துக்கு ரூ.25,000, 2-வது பரிசு பெற்ற தனேஷுக்கு ரூ.15,000. 10 கிமீ போட்டியில் முதல் பரிசு பெற்ற கோயம்புத்தூரைச் சேர்ந்தசதீஷ்குமாருக்கு ரூ.50,000, 2-வதுபரிசு பெற்ற உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த தசந்த் குமாருக்கு ரூ.25,000, 3-வது பரிசு பெற்ற ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ராம்பாலுக்கு ரூ.15,000 வழங்கப்பட்டது.

21 கிமீ போட்டியில் முதல் பரிசு பெற்ற புதுக்கோட்டையைச் சேர்ந்த ராணுவ வீரர் லட்சுமன் கோவிந்துக்கு ரூ.1,00,000, 2-வது பரிசு பெற்ற தேனியைச் சேர்ந்த ராணுவ வீரர் ராஜ்குமாருக்கு ரூ.50,000, 3-வது பரிசு பெற்றஉத்தர பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்தசந்திரசேகருக்கு ரூ.25,000. 42 கிமீ போட்டியில் முதல் பரிசு பெற்ற ஜெய்ப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த துணை காவல்ஆய்வாளர் ஷேர்சிங்குக்கு ரூ.1,00,000வழங்கப்பட்டது. போட்டியில் பங்கேற்ற12 பெண்களுக்கு சிறப்பு பரிசாக தலா ரூ.5000 வழங்கப்பட்டது.

மாரத்தான் போட்டியில் பங்கேற்ற முக்கிய பிரமுகர்களான தமிழக காவல் துறைத் தலைவர் சைலேந்திரபாபு, இந்திய ராணுவத்தின் தென்னிந்திய தலைமை அதிகாரி மேஜர் ஜெனரல் எஸ்.எஸ்.தாஹியா, இந்திய கடற்படை உயர் அதிகாரி கமாண்டர் ஜே.சுரேஷ், இங்கிலாந்து நாட்டின் அமீஸ்புரி நகரின்துணை மேயர் மோனிகா தேவேந்திரன்,இரு கண் பார்வையை இழந்த பஞ்சாபை சேர்ந்த வீரர் சாவ்லா ஆகியோருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் சான்றிதழ்களை வழங்கினார்.

அமெரிக்கா, பிரிட்டன், ஜப்பான், பிரான்ஸ் ஆகிய நாடுகளின் வெளிநாட்டு துணைத் தூதர்கள் மற்றும் மாரத்தான் போட்டிக்கு நன்கொடை அளித்த நன்கொடையாளர்களுக்கும் முதல்வர் சிறப்பு செய்து நினைவுப் பரிசுகளை வழங்கினார். முன்னதாக சைதாப்பேட்டையில் கருணாநிதியின் வெண்கலச் சிலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து மாலை அணிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x