Published : 08 Aug 2022 04:10 AM
Last Updated : 08 Aug 2022 04:10 AM

வெளிநாட்டினர் வருகையில் திருச்சி விமான நிலையம் 14-வது இடம்

திருச்சி

2019-ம் ஆண்டு பரவிய கரோனா தொற்று காரணமாக உலக நாடுகள் முழுவதும் தரைவழிப்போக்குவரத்து மட்டுமின்றி விமான சேவையும் பாதிக்கப்பட்டது. இந்தியாவில் கடந்த 2020 மார்ச் 23-ம் தேதி முதல் சர்வதேச விமான சேவைக்கு தடை விதித்த மத்திய அரசு, வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களை மீட்க சிறப்பு விமானத்தை மட்டும் இயக்க அனுமதித்தது.

இதனால் அந்நிய செலவாணி மற்றும் நாட்டின் உள்நாட்டு உற்பத்தி பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக நாட்டின் சுற்றுலாத்துறை வளர்ச்சி பாதிக்கப்பட்டு, 2.15 கோடி மக்கள் வேலை இழந்தனர். இந்தியாவில், 2 ஆண்டுகளுக்கு பிறகு 2022 மார்ச் 27-ம் தேதி முதல் சர்வதேச விமான சேவை அளிக்க மத்திய அரசு அனுமதியளித்தது. இதைத்தொடர்ந்து, வெளிநாட்டு விமான சேவை படிப்படியாக அதிகரிக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில், ஜனவரி முதல் மே மாதம் வரை இந்தியாவுக்கு சுற்றுலா வந்த வெளிநாட்டவர்களின் தரவுகளை மத்திய சுற்றுலாத் துறை அமைச்சகம் அண்மையில் வெளியிட்டுள்ளது. அதில், இந்தியாவுக்கு ஜனவரி முதல் மே வரை சுற்றுலாவாக 16,01,381 வெளிநாட்டினர் வந்துள்ளனர்.

கடந்த மே மாதம் மட்டும் 4,23,701 பேர் வருகை தந்துள்ளனர். அதில், அமெரிக்காவில் இருந்து வந்தவர்கள் 27.80 சதவீதம், வங்கதேசத்தினர் 23.47 சதவீதம், இங்கிலாந்து நாட்டினர் 7.58 சதவீதம், ஆஸ்திரேலியா நாட்டினர் 4.02 சதவீதம், கனடாவிலிருந்து 3.65 சதவீதம் பேர் வந்துள்ளனர்.

மேலும், ஜனவரி முதல் மே வரை வந்த வெளிநாட்டினரில் அமெரிக்காவில் இருந்து வந்தவர்கள் 25.57 சதவீதம், வங்கதேசத்தினர் 15.86 சதவீதம், இங்கிலாந்திலிருந்து 11.65 சதவீதம், ஆஸ்திரேலியாவிலிருந்து 6.10 சதவீதம், கனடாவிலிருந்து 5.70 சதவீதம் பேர் இந்தியாவுக்கு வருகை தந்துள்ளனர்.

இந்தியாவுக்கு வெளிநாட்டவர்கள் வருகையில் முக்கிய பங்கு வகித்த முதல் 15 விமானநிலையங்களில் டெல்லி விமானநிலையம் 35.50 சதவீதத்துடன் முதலிடத்தில் உள்ளது. 2-வது இடத்தில் மும்பை விமானநிலையம் (14.58 சதவீதம்), 3-வது இடத்தில் சென்னை விமானநிலையம் (9.92 சதவீதம்), 4-வது இடத்தில் ஹரிதாஸ்பூர் விமானநிலையம் (7 சதவீதம்), 5-வது இடத்தில் பெங்களூரு விமானநிலையம் (6.06 சதவீதம்) உள்ளன. இதில், திருச்சி விமானநிலையம் 0.85 சதவீதத்துடன் 14-வது இடம் பெற்றுள்ளது.

மே மாதத்தில் இந்தியாவுக்கு சுற்றுலா வந்த வெளிநாட்டவர் எண்ணிக்கையில் டெல்லி விமானநிலையம் 25.90 சதவீதத்துடன் முதலிடத்திலும், 2-வது இடத்திலும் மும்பை(14.58 சதவீதம்) உள்ளது. திருச்சி விமானநிலையம் 1.16 சதவீதம் என 13-வது இடம் பெற்றுள்ளது.

வருங்காலங்களில் இந்தியாவுக்கு வெளிநாட்டினர் வருகை அதிகரிக்க வேண்டுமானால், இந்தியாவை 365 நாட்களுக்கான சுற்றுலா இடமாக மேம்படுத்துவதுடன், கட்டமைக்கப்பட்ட மற்றும் நிலையான வளர்ச்சியுடைய சுற்றுலாவுக்கான சாலை வரைபடத்தை உருவாக்க வேண்டும் என திருச்சி விமானநிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x