Published : 07 Aug 2022 07:35 PM
Last Updated : 07 Aug 2022 07:35 PM

அரிசி மீதான 5 சதவீத வரி ரத்தாகும் என எதிர்பார்க்கிறோம்: தமிழ்நாடு அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்கம்

மதுரையில் இன்று நடந்த தமிழ்நாடு அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்கம் மற்றும் நெல் அரிசி வணிகர்கள் சங்கங்களின் சம்மேளனத்தின் மாநில தலைவர் டி.துளசிங்கம் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். | படம்: என்.தங்கரத்தினம்.

மதுரை: தமிழ்நாடு அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்கம் மற்றும் நெல் அரிசி வணிகர்கள் சங்கங்களின் சம்மேளனம் சார்பில் மாநில பொதுக்குழு கூட்டம் மதுரை வேலம்மாள் ஐடாஸ்கட்டர் அரங்கில் இன்று நடைபெற்றது.

இதில் அச்சங்கத்தின் மாநில தலைவர் டி.துளசிங்கம் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது, "இந்தியாவிலுள்ள மாநிலங்களில் அதிகமாக அரிசியை உணவாக உண்ணும் மாநிலம் தமிழகம்தான். விலையில்லா அரிசி வழங்கி பெருமை சேர்த்ததும் தமிழகம்தான். ஜிஎஸ்டியின் 47வது கவுன்சில் கூட்டத்தில் அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களுக்கு 5 சதவீத வரி விதிக்கப்பட்டது. அதில் மொத்த எடை 26 கிலோவுக்கு மேலுள்ள அரிசி சிப்பத்திற்கு ஜிஎஸ்டி வரி கிடையாது. 25 கிலோ அரிசிக்கு குறைவாக விற்பனை செய்தால் வரி என அறிவித்திருக்கின்றனர். அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்கள் மீதான 5 சதவீத வரியை ரத்து செய்ய வேண்டும் என பிரதமர் முதல் தமிழக நிதி அமைச்சர் வரை கோரிக்கை விடுத்துள்ளோம். மதுரையில் ஆக.28ல் நடைபெறும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் அரிசி உள்ளிட்ட பொருட்கள் மீதான வரியை ரத்து செய்யும் அறிவிப்பு வரும் என எதிர்பார்க்கிறோம்.

மேலும், வேளாண்மை சார்ந்த அரிசி ஆலைகளுக்கு தமிழக அரசு அறிவித்துள்ள மின் கட்டண உயர்விலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என மின்வாரியத் துறை தலைவர் ராஜேஷ் லக்கானியிடம் கோரிக்கை மனு அளித்துள்ளோம். விரைவில் அமைச்சரையும் சந்திக்கவுள்ளோம். ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் அரிசி ஆலை வணிகர்கள் கொள்முதல் செய்யும் நெல்லிற்கு மட்டுமே செஸ் வரி (சந்தை கட்டணம்) வசூலிக்க வேண்டும். விவசாயிகளிடம் நேரடியாக வணிகர்கள் செய்யும் நெல்லிற்கு செஸ் வரி வசூலிக்கக்கூடாது என தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளோம்” இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது, அச்சங்கங்களின் மாநில செயலாளர் ஏ.சி.மோகன், பொருளாளர் கணேச அருணகிரி மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x