Last Updated : 07 Aug, 2022 11:58 AM

 

Published : 07 Aug 2022 11:58 AM
Last Updated : 07 Aug 2022 11:58 AM

நெல் கொள்முதலில் இரட்டை நிலைப்பாட்டால் கூடுதல் எடை, வருவாய் இழப்பு: டெல்டா விவசாயிகள் கொந்தளிப்பு

தஞ்சாவூரில் கொள்முதல் நிலையங்களில் 40 கிலோ எடை கொண்ட மூட்டைகளை கையாளும் சுமை தூக்கும் தொழிலாளர்கள். | படங்கள் ஆர்.வெங்கடேஷ்

தஞ்சாவூர்: தமிழகத்தில் நெல் கொள்முதலில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் 40 கிலோ எடையும், தமிழக அரசின் ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் 75 கிலோ எடையும் வைத்து கொள்முதல் செய்யப்படுகிறது.

ஒரே மாநிலத்தில் இரட்டை கொள்முதல் நிலைப்பாட்டால் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்யும் டெல்டா மாவட்ட விவசாயிகள் எடையாலும், கூடுதல் செலவாலும் பாதிக்கப்படுகின்றனர். தமிழகத்தில் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை சார்பில் காவிரி டெல்டா மாவட்டங்கள் நீங்கலாக விருத்தாசலம், விழுப்புரம் உள்ளிட்ட பெரும்பாலான இடங்களில் நெல் கொள்முதல் செய்யப்படுகிறது. அங்கெல்லாம் ஒரு மூட்டை 75 கிலோ என்ற அடிப்படையில் நெல் கொள்முதல் செய்யப்படுகிறது.

ஆனால், காவிரி டெல்டா மாவட்டங்களில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் கொள்முதல் செய்யும் இடங்களில் மட்டும் ஒரு மூட்டை 40 கிலோ என்ற அடிப்படையில் நெல் கொள்முதல் செய்யப்படுகிறது.

காவிரி டெல்டா மாவட்டங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் 40 கிலோவுக்கு பதில் 43 கிலோ வரை கூடுதலாக எடை வைத்து முறைகேடாக கொள்முதல் செய்யப்படுகிறது. இதனால் ஒரு மூட்டைக்கு 3 கிலோ அதிகமாக விவசாயிகள் வழங்க வேண்டியுள்ளது.

அதே நேரத்தில் ஒரு மூட்டைக்கு ரூ.40 லஞ்சம் வழங்க வேண்டியுள்ளது. ஒரு குவிண்டால் நெல்லை விற்க 100 ரூபாய் லஞ்சமும், சுமார் 8 கிலோ எடை வரை கூடுதலாக நெல்லை வழங்க வேண்டியிருப்பதால், விவசாயிகளுக்கு கூடுதல் எடையிழப்பும், அதிக செலவும் ஏற்படுகிறது. எனவே நெல் மூட்டைகளின் எடையை 50 கிலோவாக உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை டெல்டா விவசாயிகள் மத்தியில் எழுந்துள்ளது.

தமிழகத்தில் விவசாயிகள் விளைவித்த நெல் விற்பனை செய்யும் போது இந்த இரட்டை நிலைப்பாட்டால், டெல்டா விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர். அதே நேரத்தில் நிலக்கடலை, எள், தேங்காய் பருப்பு 80 கிலோவாகவும், உளுந்து, பருத்தி, கம்பு, கேழ்வரகு, மக்காச்சோளம், பாசிப்பயறு, துவரை ஆகியவை ஒரு மூட்டை 100 கிலோ என்ற அடிப்படையிலும் கொள்முதல் செய்யப்படுகிறது.

தேசிய மனித உரிமை ஆணையம் சுமை தூக்கும் தொழிலாளர்கள் பாதிக்ககூடாது என்பதால், நெல் கொள்முதலில் 40 கிலோ எடை வைத்து கொள்முதல் செய்ய வேண்டும் என கூறியதாக, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தினர் வாய்மொழியாக கூறி வருகின்றனர். ஆனால், அதே நேரத்தில் மற்ற விளைபொருட்கள் ஒரு மூட்டைக்கு 80, 100 கிலோ என இருக்கும்போது ஏன் நெல்லுக்கு மட்டும் இந்த பாகுபடு, அந்த மூட்டைகளையும் சுமை தூக்கும் தொழிலாளர்கள் தானே சுமக்கின்றனர் என டெல்டா விவசாயிகள் கேள்வி எழுப்புகின்றனர்.

இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்க செயாலாளர் சுந்தர விமல்நாதன் கூறுகையில்: "ஆந்திரா, தெலுங்கானா, சத்தீஸ்கர் போன்ற மாநிலங்களில் 75 கிலோவும், தமிழகத்தின் ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில்கூட 75 கிலோ என்ற அடிப்படையில் ஒரு மூட்டை நெல் கொள்முதல் செய்யப்படுகிறது. ஆனால் டெல்டாவில் மட்டுமே 40 கிலோ ஒரு சிப்பம் என கூறி கொள்முதல் செய்கின்றனர். இதில் ஒரு சிப்பத்துக்கு ரூ.40 வரை லஞ்சம் கட்டாயமாக கேட்கின்றனர். ஒரு சிப்பத்துக்கு 3 கிலோ வரை கூடுதல் எடையும் வைத்து எடுக்கப்படுகிறது. தமிழத்தில் ஒரே பொருளான நெல்லை விளைவிக்கும் விவசாயிகள் மத்தியில் இரட்டை நிலைப்பாடு எடுக்கப்படுவது எந்த விதத்தில் நியாயம்.

தேசிய மனித உரிமை ஆணையம் 40 கிலோ தான் நெல் கொள்முதல் செய்ய வேண்டும் எனக் கூறியிருந்தால் இந்தியா முழுவதும் இதை அமல்படுத்தப்பட்டிருக்க வேண்டும், ஆனால் டெல்டாவைத்தவிர வேறு எங்கும் இந்த நடைமுறை கடைபிடிக்கப்படவில்லை.

இதில் முறைகேடு அதிகம் நடைபெறுவதில் தொழிலாளர்கள் அடங்கிய தொழிற்சங்கங்களுக்கு தொடர்பு இருப்பதால் அரசியல் கட்சியினர் யாரும் கண்டுகொள்வதில்லை. ஆனால் பாதிக்கப்படுவது என்பது பாவப்பட்ட, விவசாயிகள் மட்டுமே. எனவே வரும் சம்பா கொள்முதல் பருவத்திலாவது டெல்டா மாவட்டங்களில் நெல் கொள்முதலில் ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் கொள்முதல் செய்வது போல் 75 கிலோ எடையை நடைமுறைப்படுத்த வேண்டும்" என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x