Published : 07 Aug 2022 04:25 AM
Last Updated : 07 Aug 2022 04:25 AM
சென்னை: தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையத்தில் காலி பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
மாநில மனித உரிமை ஆணையத்தின் 25-வது ஆண்டு வெள்ளி விழா சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று நடைபெற்றது. இதில் விழா மலரை வெளியிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின், மனித உரிமை பாதுகாப்பில் சிறப்பாகச் செயல்பட்ட திருவாரூர் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன், தூத்துக்குடி ஆட்சியர் செந்தில் ராஜ், கன்னியாகுமரி ஆட்சியர் அரவிந்தன், மதுரை மாநகர காவல் ஆணையர் பி.செந்தில்குமார், கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன், கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரோஜ்குமார் தாக்கூர் ஆகியோருக்கு விருது வழங்கி கவுரவித்தார்.
பின்னர் முதல்வர் பேசியதாவது: மனித உரிமைகள் பாதுகாப்பு சட்டம் 1993-ல் உருவாக்கப்பட்டாலும், தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம் 1997-ம் ஆண்டில், திமுக ஆட்சியில்தான் தொடங்கப்பட்டது. இதை உருவாக்கியவர் அன்றைய முதல்வர் கருணாநிதி.
தந்தை பெரியார் முதன்முதலில் தான் உருவாக்கிய அமைப்புக்கு ‘சுயமரியாதை இயக்கம்' என்றுதான் பெயர் சூட்டினார். மனித உரிமைக்கு அடித்தளமிட்டது சுயமரியாதைதான். வெள்ளி விழா ஆண்டை முன்னிட்டு, ஆணையத்தில் உள்ள காலி பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும். பணியாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என அறிவிக்கிறேன்.
மேலும், ஆணைய விசாரணைக் குழுவில் காவல் துறையினரின் எண்ணிக்கை போதுமானதாக இல்லை என்று குறிப்பிட்டுள்ளனர். அதுகுறித்து விரைவில் ஆய்வுசெய்து, உரிய முடிவு எடுக்கப்படும். ஆணையத்தின் இணையதளம் தமிழில் உருவாக்கப்படும். ஆணையத் தகவல்கள் அனைத்தும் தமிழில் மொழிபெயர்த்து வெளியிடப்படும்.
தமிழ் வழக்காடு மொழி
பொதுமக்கள், வழக்கறிஞர்களின் நலன் கருதி, சென்னையில் உச்ச நீதிமன்றத்தின் கிளையை அமைக்க வேண்டும். சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக தமிழ் மொழி இடம்பெற வேண்டும். இவ்வாறு முதல்வர் பேசினார்.
உச்ச நீதிமன்ற நீதிபதி எஸ்.கே.கவுல் பேசும்போது, ‘‘நீதித் துறையில் பெண்கள் அதிகமாக உள்ளனர். டெல்லி உயர் நீதிமன்றத்தில் 78 சதவீத நீதிபதிகள் பெண்கள். இது இடஒதுக்கீட்டால் மட்டும் கிடைத்தது அல்ல. அவர்கள் அதிகாரம் பெற கல்வி உதவியாக இருந்துள்ளது’’ என்றார்.
தேசிய மனித உரிமை ஆணைய தலைவர் அருண் மிஸ்ரா பேசும்போது, ‘‘கலாச்சாரம், மொழியால் மக்கள் பிரிந்திருந்தாலும், மனித உரிமை காக்கப்படுவதால், உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடாக இந்தியா விளங்குகிறது’’ என்றார்.
சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத்பண்டாரி பேசும்போது, ‘‘சிறுவர் சீர்திருத்தப் பள்ளிகள் மற்றும் சிறைச் சாலைகளில் இருப்போருக்கான அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்பட வேண்டும்’’ என்றார்.
சட்டத் துறை அமைச்சர் ரகுபதி பேசும்போது, ‘‘தமிழகத்தில் மனித உரிமைக்குப் பாதிப்பு ஏற்பட்டால், முதலில் குரல் கொடுப்பவராக முதல்வர் ஸ்டாலின் இருக்கிறார்’’என்றார்.
இந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள் எ.வ.வேலு, க.பொன்முடி, தலைமைச் செயலர் வெ.இறையன்பு, டிஜிபி சைலேந்திர பாபு, ஆணையத் தலைவர் நீதிபதி பாஸ்கரன், செயலர் விஜயகார்த்திகேயன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT