Published : 07 Aug 2022 07:22 AM
Last Updated : 07 Aug 2022 07:22 AM

எளிதில் அடையாளம் காண்பதற்காக பெண்கள் இலவச பயண பேருந்துகளுக்கு பிங்க் நிறம் - உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்

சென்னை: பெண்கள் இலவச பயணத்துக்கான சாதாரண கட்டண பேருந்துகளை எளிதில் அடையாளம் காண்பதற்காக, பிங்க் நிறம் பூசப்பட்டுள்ளது. இப்பேருந்துகள் சேவையை உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ தொடங்கி வைத்தார். இணைப்பு சிற்றுந்துகள் சேவையையும் தொடங்கி வைத்தார்.

கடந்த ஆண்டு திமுக ஆட்சிப் பொறுப்பேற்றதும், தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், தமிழகம் முழுவதும் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் பெண்கள் கட்டணமின்றி இலவசமாக பயணிக்க அனுமதிவழங்கி முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார். பின்னர் இத்திட்டம் மாற்றுத் திறனாளிகள், திருநங்கைகள் என விரிவுபடுத்தப்பட்டது. இது மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில், கட்டணமில்லா சேவை வழங்கும் பேருந்துகளை எளிதில் அடையாளம் காண ஏதுவாக, பேருந்துகளின் முன்புறமும், பின்புறமும் பிங்க் நிறம் பூசப்பட்டுள்ளது. அந்த வகையில், 50பேருந்துகள் நேற்று மக்கள் பயன்பாட்டுக்காக தொடங்கி வைக்கப்பட்டன. சென்னை அண்ணா சதுக்கம் பேருந்து நிலையத்தில்

அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தலைமையில் நடந்த நிகழ்ச்சியில், சேப்பாக்கம் -திருவல்லிக்கேணி எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின், பிங்க் நிற பேருந்துகளை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

10 இணைப்பு சிற்றுந்துகள்

பின்னர், அமைச்சர்கள், உதயநிதி, அதிகாரிகள் உள்ளிட்ட அனைவரும் பிங்க் நிற பேருந்தில் ஏறி,ஓமந்தூரார் மெட்ரோ ரயில் நிலையத்துக்கு சென்றனர். அங்கு, சிற்றுந்துகள் சேவை தொடக்க நிகழ்ச்சி நடந்தது. அரசினர் தோட்டம், கிண்டி, சின்னமலை, ஷெனாய் நகர், விமானநிலையம் ஆகிய 5 முக்கிய மெட்ரோரயில் நிலையங்களில் இருந்து சென்னையின் முக்கிய இடங்களுக்கு செல்ல தலா 2 சிற்றுந்துகள் வீதம் 10 இணைப்பு சிற்றுந்துகளின் சேவையை உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

போக்குவரத்து துறை செயலர் கே.கோபால், சென்னை மெட்ரோ ரயில் நிர்வாக இயக்குநர் எம்.ஏ.சித்திக், மாநகர போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர் அன்பு ஆபிரகாம், சென்னை மாநகராட்சி 9-வது மண்டலக் குழுத் தலைவர் மதன்மோகன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

புதிய சிற்றுந்துகள் வழித்தடம்

அரசினர் தோட்டம் மெட்ரோ - தலைமைச் செயலகம் இடையிலான சிற்றுந்து (எஸ் 96): வாலாஜா சாலை, திருவல்லிக்கேணி, மாநிலக் கல்லூரி, எழிலகம், சென்னை பல்கலைக்கழகம் வழி.

கிண்டி மெட்ரோ - வேளச்சேரி விஜயநகர் பேருந்து நிலையம் சிற்றுந்து (எஸ் 97): செல்லம்மாள் கல்லூரி, கிண்டி ரேஸ்கோர்ஸ், குருநானக் கல்லூரி, வேளச்சேரி வழி.

சின்னமலை மெட்ரோ - தரமணி சிற்றுந்து (எஸ் 98): சைதாப்பேட்டை நீதிமன்றம், மத்திய கைலாஷ், டைடல் பார்க் வழி.

ஷெனாய் நகர் மெட்ரோ - தியாகராய நகர் பேருந்து நிலையம் சிற்றுந்து (எஸ் 99): அமைந்தகரை மார்க்கெட், மேத்தா நகர், லயோலா கல்லூரி, வடக்கு உஸ்மான் சாலை, தியாகராய நகர் வழி.

விமான நிலையம் மெட்ரோ - மேற்கு தாம்பரம் சிற்றுந்து (எஸ் 100): பல்லாவரம், குரோம்பேட்டை, சிட்லபாக்கம், பூண்டி பஜார், தாம்பரம் கிழக்கு, தாம்பரம் மேற்கு வழி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x