Published : 07 Aug 2022 07:27 AM
Last Updated : 07 Aug 2022 07:27 AM
சென்னை: அரசியலமைப்பு சட்டம் குறித்த புரிதல், விழிப்புணர்வு மக்களிடம் வரும்போதுதான் நாட்டில் உண்மையான ஜனநாயகம் மலரும் என்று, சென்னையில் நடந்த கருத்தரங்கில் உச்ச நீதிமன்ற முன்னாள்நீதிபதி செலமேஸ்வர் தெரிவித்தார்.
சென்னை தரமணியில் உள்ள ஆசிய ஊடகவியல் கல்லூரியில் (ஏசியன் காலேஜ் ஆஃப் ஜர்னலிசம்) ‘அரசியலமைப்பு மற்றும் ஜனநாயகம்’ என்ற தலைப்பிலான கருத்தரங்கம் நேற்று நடந்தது.
இந்த நிகழ்வில், உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் காளீஸ்வரம் ராஜ் எழுதிய ‘சட்டம், வாழ்க்கையில் அரசியலமைப்பின் அக்கறைகள்’ என்ற நூல் வெளியிடப்பட்டது. நூலை உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஜெ.செலமேஸ்வர் வெளியிட, ‘இந்து’ என்.ராம் பெற்றுக் கொண்டார். டெல்லி துலிகா புத்தக நிறுவனத்தின் வெளியீட்டாளர் இந்திரா சந்திரசேகர் நூலை அறிமுகப்படுத்தி பேசினார். நூலாசிரியர் காளீஸ்வரம் ராஜ் ஏற்புரை நிகழ்த்தினார். கல்லூரி தலைவர் சசிகுமார் வரவேற்றார். டீன் நளினி ராஜன் நன்றி கூறினார்.
கருத்தரங்கில் பங்கேற்றவர்கள் பேசியதாவது:
உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஜெ.செலமேஸ்வர்: உச்சநீதிமன்றம் என்றாலே தலைமை நீதிபதி மட்டும்தான் என்பது போன்றமாயத் தோற்றம் ஏற்படுத்தப்பட்டுஉள்ளது. அதேபோல, 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தலில் போட்டியிட்டு ஆட்சிப் பொறுப்பில் அமர்வதுதான் ஜனநாயகத்தின் வரையறை என்று ஆகிவிட்டது. பணம் செலவழித்து பதவியை பிடிப்பதை தீவிர விஷயமாக கருதாமல், சாதாரணமாக எடுத்துக் கொள்கிறோம். வெறும் எண்களில் அடங்கும் ஜனநாயகத்துக்கு எந்தஅர்த்தமும் இல்லை. அரசியலமைப்பு சட்டம் குறித்த புரிதல், விழிப்புணர்வு மக்களிடம் வரும்போதுதான் நாட்டில் உண்மையான ஜனநாயகம் மலரும். நாம் ஸ்மார்ட்போனுக்கு மாறியபோதே, அந்தரங்க உரிமைகள் பறிபோய்விட்டன. நவீன யுகத்தில் தொழில்நுட்ப வளர்ச்சி தேவைதான். அதேநேரம், அந்த வளர்ச்சி நம் உரிமைகளை பறிப்பதாக இருக்கக் கூடாது.
உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி கே.சந்துரு: ஒவ்வொரு காலகட்டத்திலும் சட்டரீதியாக அடிப்படை உரிமைகளை நிலைநாட்ட குரல் கொடுத்தது ஏ.கே.கோபாலன், நம்பூதிரிபாட் போன்றஇடதுசாரி கம்யூனிஸ்ட் தலைவர்கள்தான். ஆனால், அந்த உரிமைகளை நீர்த்துப்போகச் செய்யும் வகையில் உச்ச நீதிமன்ற செயல்பாடுகள் இருந்து வந்துள்ளன. பார்க்கின்சன் நோயால் சிறையில் அவதிப்பட்ட பாதிரியார் ஸ்டேன்ஸ்சுவாமி வழக்கில், தண்ணீர் குடிக்க‘ஸ்ட்ரா’ வழங்க மறுத்ததுதான் நமது நீதித் துறை. மக்களுக்காகவே நீதித் துறை என்ற நிலை வரவேண்டும். நீதித் துறை ஒருபோதும் மவுனம் காக்கக் கூடாது.
பஞ்சாப் ஹரியாணா உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி கே.கண்ணன்: சிறுபான்மை மக்களை பெரும்பான்மை சமூகம்பாதுகாக்கும்போதுதான் ஜனநாயகம் கிடைத்ததாக அர்த்தம் எனடாக்டர் அம்பேத்கர் வரையறுத்துள்ளார். அதற்கேற்ப, சிறுபான்மை சமூகத்தை பெரும்பான்மை சமூகம்மதித்து, சமமாக பாவிக்க வேண்டும். அரசியலமைப்பு முக்கியத்துவம் வாய்ந்த முக்கிய வழக்குகளை உச்ச நீதிமன்றம் தள்ளிப்போடும் நிலை மாற வேண்டும்.
‘இந்து’ என்.ராம்: கருத்தரங்கில் பங்கேற்றுள்ள 3 நீதியரசர்களும் மிகச் சிறந்த ஆளுமைகள். நீதிபதி செலமேஸ்வர் கடந்த 2018-ம் ஆண்டு நடத்திய செய்தியாளர் சந்திப்பு உச்ச நீதிமன்றத்தின் உள்ளே என்ன நடக்கிறது என்பதை மக்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டியது. மக்களின் அடிப்படை உரிமைகளை பாதுகாப்பதில் நீதித் துறையின் பங்கு என்ன என்பதை பொருத்தே, அதன் செயல்பாட்டுத் திறனை உறுதி செய்ய முடியும். இந்த விஷயத்தில் நீதித் துறையின் செயல்பாடுகள் இரண்டும் கலந்த கலவையாகவே உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT