Published : 07 Aug 2022 05:33 AM
Last Updated : 07 Aug 2022 05:33 AM

சுதந்திர தின விழாவை மக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாட வேண்டும் - தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிவுறுத்தல்

சென்னை பட்டினப்பாக்கத்தில் இருந்து செங்கை மாவட்டம் திருவிடந்தை வரை தேசியக் கொடிகளுடன் மகளிர் பங்கேற்கும் 4 சக்கர வாகனப் பேரணியில் பாஜக தேசிய செயற்குழு சிறப்பு அழைப்பாளரான நடிகை குஷ்பு காரை ஓட்டிச் செல்ல, அவரை பின்தொடர்ந்து, 74 கார்கள் தேசியக் கொடியுடன் பேரணியாக சென்றன. படம்: ம.பிரபு

திருவள்ளூர்: சுதந்திர தினவிழாவை மக்கள் எழுச்சியுடனும், மகிழ்ச்சியுடனும் கொண்டாட வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம், ஆவடியில் பாஜக சார்பில், நாட்டின் 75-வது சுதந்திர தின அமுத பெருவிழாவை முன்னிட்டு, ஆவடி மாநகராட்சி அலுவலகத்தில் இருந்து செக்போஸ்ட் காமராஜர் சிலை வரை பேரணி நடைபெற்றது.

இதில், தமிழக பாஜக தலைவர்அண்ணாமலை சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார். பேரணி முடிவில் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை கூறியதாவது:

நாடு சுதந்திரம் அடைந்து 75ஆண்டுகள் ஆவதை முன்னிட்டு, வரும் 15-ம் தேதி மிகப் பெரிய விழா கொண்டாடப்பட உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி இந்த விடுதலை அமுதப் பெருவிழாவை ஓராண்டுக்கு கொண்டாட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

அதன்படி, திருவள்ளூர் மேற்கு மாவட்ட பாஜக சார்பில், இன்று (நேற்று) ஆவடியில் மிகப் பெரிய பேரணி நடத்தப்பட்டுள்ளது. சுதந்திர தினவிழாவை மக்கள் எழுச்சியுடனும், மகிழ்ச்சியுடனும் கொண்டாட வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இப்பேரணி நடைபெற்றது. இதுபோன்று தமிழகம் முழுவதும் பேரணி நடைபெறும்.

பிரதமர் மோடி வரும் 13 முதல் 15-ம் தேதி வரை 3 நாட்களுக்கு பொதுமக்கள் அனைவரும் தங்கள்வீடுகளில் தேசியக் கொடியை ஏற்ற வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். இதன்படி, தமிழக பாஜக சுமார் 50 லட்சம் வீடுகளுக்கு மேல் தேசியக் கொடியை கொண்டு செல்வதற்கான ஆயத்தப் பணிகளில் ஈடுபட்டுள்ளது.

அனைவரது வீடுகளிலும் தேசியக் கொடியை ஏற்ற வேண்டும் என்ற பிரதமரின் இந்த வேண்டுகோளை தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் குறிப்பாக, திமுக முன்னெக்க வேண்டும்.

ஆவின் பாலில் ஊழல், பாலைஊற்றும் கவரில் ஊழல். இதை நான் மட்டும் கூறவில்லை. ஆவின் நிறுவனத்தில் பணிபுரியக் கூடிய தொழிற்சங்கங்களும், பால் முகவர்களும் என அனைவரும் சொல்கிறார்கள். ஆவின் பால் பாக்கெட் வாங்கி எடை போட்டு பார்த்தால் 500 மில்லி லிட்டர் இருக்க வேண்டிய எடையில் 430 மில்லி லிட்டர் தான் இருக்கிறது. இது ஊரறிந்த உண்மை. அமைச்சர் நாசர் அவர் தன்னை சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

இத்தனை ஊழல் குற்றச்சாட்டு இருக்கக் கூடிய இந்தப் பதவியில் நீடிப்பது அவருக்கு அழகா என்ற கேள்விக்கு அமைச்சர் நாசர் பதில் சொல்ல வேண்டும் என்றார்.

ஆவடி தெற்கு மண்டல தலைவர் ரவிந்திரநாத் தலைமையில் நடைபெற்ற இப்பேரணியில் 2,000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

தனியார் அமைப்பு சார்பில் சென்னை பட்டினப்பாக்கத்தில் இருந்து செங்கை மாவட்டம் திருவிடந்தை வரை தேசியக் கொடிகளுடன் மகளிர் பங்கேற்கும் 4 சக்கர வாகனப் பேரணி நேற்று நடந்தது. பேரணியை பாஜக தேசியமகளிர் அணி தலைவர் வானதிசீனிவாசன் எம்எல்ஏ கொடியசைத்து தொடங்கி வைத்தார். பாஜக தேசிய செயற்குழு சிறப்பு அழைப்பாளரான நடிகை குஷ்பு காரை ஓட்டிச் செல்ல, அவரை பின்தொடர்ந்து, 74 கார்கள் தேசியக் கொடியுடன் பேரணியாக சென்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x