நாளிதழ் அலுவலக எரிப்பு வழக்கில் 4 பேர் ஜாமீன் மனு தள்ளுபடி: தலைமறைவாக உள்ள 2 பேரை கைது செய்ய உத்தரவு

நாளிதழ் அலுவலக எரிப்பு வழக்கில் 4 பேர் ஜாமீன் மனு தள்ளுபடி: தலைமறைவாக உள்ள 2 பேரை கைது செய்ய உத்தரவு
Updated on
1 min read

மதுரையில் ஒரு நாளிதழ் அலுவலகம் எரிப்பு வழக்கில் பிடிவாரண்ட்டில் கைதான 4 பேர் ஜாமீன் மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள 2 பேரை கைது செய்ய சிபிஐக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மதுரையில் ஒரு நாளிதழ் அலுவலகத்தில் கடந்த 9.5.2007-ல் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இதில் 3 பேர் கொல்லப்பட்டனர். இந்த வழக்கில் போலீஸாரால் கைது செய்யப்பட்ட அட்டாக் பாண்டி உட்பட 17 பேரை மதுரை சிபிஐ நீதிமன்றம் 2009-ல் விடுதலை செய்தது.

பிடிவாரண்ட்

இதை எதிர்த்து உயர் நீதிமன்ற கிளையில் சிபிஐ தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை இழுத்தடித்ததால் அட்டாக் பாண்டியின் கூட்டாளிகள் 12 பேருக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. இவர்களில் 9 பேரை சிபிஐ கைது செய்தது. ஒருவர் நீதிமன்றத்தில் சரண் அடைந்தார்.

தயாமுத்து, திருமுருகன் என்கிற காட்டுவாசி முருகன் ஆகியோர் தொடர்ந்து தலைமறைவாக உள்ளனர். பிடிவாரண்ட்டில் கைதான சரவணமுத்து, முருகன் என்கிற சொரிமுருகன், சுதாகர் ஆகியோ ருக்கு உயர் நீதிமன்ற கிளை நிபந்தனை ஜாமீன் வழங்கியது.

இந்நிலையில், பிடிவாரண்ட்டில் கைது செய்யப்பட்ட ரமேஷ் பாண்டி, ராமையாபாண்டியன், வழிவிட்டான், கந்தசாமி ஆகியோர் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தனர். ஜாமீ்ன் பெற்ற 3 பேரும் அதற்கான நிபந்தனைகளை தளர்த்தக்கோரி மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனுக்கள் நேற்று விசாரணைக்கு வந்தன. ராமையாபாண்டியன் உட்பட 4 பேரின் ஜாமீன் மனுவையும், ஜாமீன் நிபந்தனையை தளர்த்தக்கோரி சரவணமுத்து உட்பட 3 பேர் தாக்கல் செய்த மனுவையும் நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள தயாமுத்து, திருமுருகன் ஆகியோரை கைது செய்யவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in