

மேட்டூர் அணையில் இருந்து, உபரிநீர் காவிரி ஆற்றில் திறந்துவிடப்படுகிறது. வெள்ள அபாயஎச்சரிக்கை இருப்பதால் கரையோரங்களில் பொதுமக்கள் புகைப்படம், செல்ஃபி எடுப்பது, வேடிக்கை பார்ப்பதை தவிர்க்க வேண்டும், என பொதுப்பணித்துறை மற்றும் காவல் துறையினர் எச்சரித்துள்ளனர்.
இருப்பினும் மேட்டூரில் இருந்து எடப்பாடி, பூலாம்பட்டி செல்லும் வழியில் உள்ள எம்.ஜி.ஆர். மேம்பாலத்தில் சுற்றுலாப் பயணிகள் செல்ஃபி மற்றும் புகைப்படம் எடுத்துக் கொண்டும், ஆபத்தான முறையில் காவிரி ஆற்றில் செல்லும் வெள்ளத்தை எட்டிப் பார்த்துக் கொண்டும் இருந்தனர்.
நேற்று, விடுமுறை நாள் என்பதால் சேலம், ஈரோடு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் மேட்டூருக்கு வருகை புரிந்தனர். இவர்கள் பாலத்தின் மீது வாகனங்களை நிறுத்தி ஆற்றில் செல்லும் வெள்ளத்தை வேடிக்கை பார்த்ததால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகனங்களை அப்புறப்படுத்திய போலீஸார், சுற்றுலாப் பயணிகளையும் எச்சரித்து அனுப்பினர்.