

சென்னையில் உள்ள போக்குவரத்து நெரிசலை கவனத்தில் கொண்டு தமிழக அரசு கல்வி நிலையங்களின் அருகே போக்குவரத்தை சீர் செய்ய வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''சென்னை, கிண்டியில் உள்ள தனியார் கல்லூரியில் படிக்கின்ற மாணவிகள் இன்று மதியம் கல்லூரி முடிந்து வீடு திரும்பினர். அப்போது இரு சக்கர வாகனங்களில் சென்ற மாணவிகள் சாலையைக் கடக்க முயன்ற போது 3 மாணவிகள் மீது தண்ணீர் கொண்டு சென்ற லாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே அந்த மூன்று பேரும் பரிதாபமாக உயிரிழந்திருக்கிறார்கள். இது மிகவும் துரதிர்ஷ்டவசமானது, வருத்தத்துக்குரியது. மேலும் அந்த வழியாகச் சென்ற மற்ற இரு சக்கர வாகனங்கள் மீதும் லாரி மோதியதால் சிலர் காயமடைந்ததாகவும், வாகனங்கள் சேதமடைந்ததாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இறந்த மாணவிகளின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தமிழக அரசு உரிய நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும். மேலும் காயமடைந்தவர்களுக்கு உடனடி சிறப்பு சிகிச்சை அளிக்க வேண்டும்.
லாரியை வேகமாக ஓட்டியதால் தான் இந்த திடீர் விபத்து ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது மிகவும் கண்டிக்கத்தக்கது. லாரியை ஓட்டியவர் மீது குற்றம் இருப்பின் தமிழக அரசு அவரை சட்டத்தின் அடிப்படையில் கடுமையாக தண்டிக்க வேண்டும். இந்த விபத்துக்கான காரணத்தை கண்டறிந்து, இது போன்ற விபத்துகளை தவிர்க்க வேண்டிய நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்.
அத்தியாவசியத் தேவையான தண்ணீரை கொண்டு செல்லும் வாகனங்கள் வேகமாகச் செல்வதை தடுத்து நிறுத்த வேகக்கட்டுப்பாட்டு கருவி பொறுத்துதல், வாகன ஓட்டுநரின் உரிமத்தை சரிபார்த்தல், வாகனத்திற்கு தகுதிச் சான்றிதழ் உள்ளதா என்பதை சோதனை செய்தல் போன்றவற்றின் மூலம் பாதுகாப்பான போக்குவரத்துக்கு போக்குவரத்து துறையும், மாநகராட்சியும், காவல் துறையும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.
மேலும் சென்னையில் உள்ள போக்குவரத்து நெரிசலை கவனத்தில் கொண்டு தமிழக அரசு கல்வி நிலையங்களின் அருகே போக்குவரத்தை சீர் செய்ய வேண்டும். குறிப்பாக பள்ளி, கல்லூரி ஆரம்பிக்கும் நேரத்திலும், வகுப்பு முடிந்து செல்லும் நேரத்திலும் மாணவ, மாணவிகளின் போக்குவரத்துக்கு இடையூறு இல்லாத வகையில் அவர்களுக்கு பாதுகாப்பு கொடுக்கக் கூடியது கல்வி நிறுவனம் மற்றும் காவல்துறையினரின் கடமையாகும். அதே நேரத்தில் தமிழக அரசு அனைத்து கல்வி நிலையங்களுக்கும் அருகில் வேகத்தடை, மின்விளக்கு, சாலைப்பாதுகாப்பு விளம்பரங்கள் போன்றவற்றை அமைத்து இது போன்ற விபத்துக்களை தவிர்க்க வேண்டும்.
பொது மக்களும், வாகனங்களை இயக்குபவர்களும் சாலைவிதிகளைப் பின்பற்ற வேண்டும் என்ற அவசியத்தை விழிப்புணர்வு மூலம் உணர வைக்க வேண்டிய செயல்பாடுகளில் தமிழக அரசு தொடர்ந்து ஈடுபட வேண்டும்'' என்று வாசன் கூறியுள்ளார்.