Published : 06 Aug 2022 11:24 AM
Last Updated : 06 Aug 2022 11:24 AM

சுதா மருத்துவமனைக்கு ‘சீல்’ வைக்க எதிர்ப்பு: ஈரோடு தனியார் மருத்துவமனைகள் வேலைநிறுத்தம்

ஈரோடு: கருமுட்டை விற்பனை விவகாரத்தில் சுதா மருத்துவமனைக்கு ‘சீல்’ வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து தனியார் மருத்துவமனைகளும் இன்று ஒருநாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன.

ஈரோட்டில் சிறுமியிடம் கருமுட்டை பெற்ற விவகாரத்தில், சுதா மருத்துவமனைக்கு தமிழக அரசு ‘சீல்’ வைத்தது. இதனைத் தொடர்ந்து மருத்துவமனை நிர்வாகத்தினர், சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையிட்டனர். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி, அரசின் உத்தரவை ரத்து செய்து, மருத்துவமனை தொடர்ந்து செயல்பட உத்தரவிட்டார். மேலும், இது தொடர்பாக மருத்துவமனை தரப்பில் பதில் அளிக்க போதிய அவகாசம் வழங்கி, 12 வாரங்களுக்குள் இறுதி உத்தரவைப் பிறப்பிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டிருந்தார். இதையடுத்து, வழக்கம் போல மருத்துவமனை செயல்படத் தொடங்கியது.

இந்த நிலையில், தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து, தமிழக அரசு சார்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு, மருத்துவமனைக்கு வைக்கப்பட்ட ‘சீலை’ அகற்ற வேண்டும் என்ற தனிநீதிபதியின் உத்தரவை ரத்து செய்தும், மருத்துவமனைக்கு ‘சீல்’ வைத்தது செல்லும் என்றும் தீர்ப்பளித்தனர்.

இதனால் மீண்டும் சுதா மருத்துவமனையை மூடும் நிலை ஏற்பட்டது. இந்நிலையில், மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் ஊழியர்கள் தங்களுடைய வாழ்வாதாரத்தை பாதுகாக்க வலியுறுத்தி, மருத்துவமனை முன்பு நேற்றிரவு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனிடையே, சுதா மருத்துவமனைக்கு ‘சீல்’ வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இந்திய மருத்துவ சங்கத்தின் ஈரோடு கிளை சார்பில் இன்று (6-ம் தேதி) ஒரு நாள் வேலைநிறுத்தம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக இந்திய மருத்துவ கழகத்தின் நிர்வாகிகளான மருத்துவர்கள் ராஜா, அபுல்ஹாசன் ஆகியோர் கூறியதாவது: "கடந்த 40 ஆண்டுகளாக சுதா மருத்துவமனை செயல்பட்டு வருகின்றது. இதில் ஏராளமான நோயாளிகள் சிகிச்சை பெற்றுள்ளனர். திடீரென்று, மருத்துவமனைக்கு ‘சீல்’ வைக்கப்பட்டால், இங்கு சிகிச்சை பெற்றவர்கள் எங்கு செல்வார்கள்? சுதா மருத்துவமனை பல்துறை மருத்துவமனையாக உள்ள நிலையில், ஒரு பிரிவில் தவறு நடந்ததாக கூறப்படும் நிலையில், ஒட்டுமொத்த மருத்துவமனைக்கும் ‘சீல்’ வைப்பது என்பது ஏற்புடையது அல்ல.

மேலும், சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பு நகல் கையில் கிடைக்காத நிலையில், அவசரமாக ஒட்டுமொத்த மருத்துவமனைக்கு ‘சீல்’ வைப்பது தவறான நடவடிக்கையாகும். எனவே, இதை கண்டித்து, ஈரோடு மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனைகள் அனைத்தும் 6ம் தேதி (இன்று) முழுமையாக மூடப்படும். புறநோயாளிகள் பிரிவு உள்பட மொத்தமாக செயல்படாது.

மாவட்டத்தில் உள்ள 250 மருத்துவமனைகள், 800 மருத்துவர்கள் போராட்டத்தில் கலந்து கொள்ள உள்ளனர். மாநிலம் தழுவிய அளவில் போராட்டம் நடத்துவது குறித்து, இரண்டு நாளில் முடிவு எடுக்கப்படும்" என்றனர்.

ஈரோட்டில் மருத்துவர்கள் வேலை நிறுத்தத்தால் இன்று காலை சிகிச்சைக்காக வந்த நோயாளிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x