Published : 06 Aug 2022 08:36 AM
Last Updated : 06 Aug 2022 08:36 AM

அதிமுக அலுவலக சாவியை ஒப்படைத்த விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் இபிஎஸ் தரப்பில் கேவியட் மனு தாக்கல்

சென்னை: அதிமுக தலைமைக் கழக வழக்கில் எடப்பாடி பழனிசாமி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சென்னை வானகரத்தில் அதிமுக பொதுக்குழுக் கூட்டம் கடந்த ஜூலை 11-ம்தேதி நடந்தது. அதில் இடைக்கால பொதுச்செயலாளராக பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். அப்போது ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்துக்கு ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் சென்றார்.

அலுவலகத்தின் கதவுகள் பூட்டப்பட்டதால் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் பழனிசாமி ஆதரவாளர்களுக்கு இடையே கலவரம் ஏற்பட்டது. இதையடுத்து அதிமுக தலைமை அலுவலகத்துக்கு வருவாய் கோட்டாட்சியர் சீல் வைத்தார். இந்த சீலை அகற்றக்கோரியும், அலுவலக சாவியை தங்களிடம் ஒப்படைக்கக் கோரியும் இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் சார்பில் தனித்தனியாக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

அந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி என்.சதீஷ்குமார், அதிமுகதலைமை அலுவலகத்தின் சாவியை பழனிசாமியிடம் ஒப்படைக்க உத்தரவிட்டார். மேலும், ஒரு மாத காலத்துக்கு தொண்டர்கள் யாரையும் அதிமுக தலைமை அலுவலகத்துக்குள் அனுமதிக்க வேண்டாம் எனவும், போதுமான போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார். இதையடுத்து, பழனிசாமியிடம் சாவி ஒப்படைக்கப்பட்டது.

தொடர்ந்து தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்தும், சாவியை பழனிசாமியிடம் வருவாய் துறையினர் ஒப்படைத்ததை எதிர்த்தும் ஓ.பன்னீர்செல்வம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது. இந்த வழக்கில் தான் தற்போது பழனிசாமி தரப்பில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வழக்கில் தனது தரப்பு வாதத்தை கேட்காமல் உத்தரவு பிறப்பிக்கக்கூடாது எனக் கூறி இபிஎஸ் தரப்பு வழக்கறிஞர்கள் கேவியட் மனுவை தாக்கல் செய்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x