Published : 06 Aug 2022 04:23 AM
Last Updated : 06 Aug 2022 04:23 AM

போதைப் பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு - எம்எல்ஏ-க்களுக்கு முதல்வர் கடிதம்

சென்னை: தமிழகம் முழுவதும் வரும் 11-ம் தேதி பள்ளி, கல்லூரிகளில் நடைபெறும் போதைப் பொருட்களின் தீமை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் எம்எல்ஏ-க்கள் கட்டாயம் கலந்துகொள்ள வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழகத்தில் போதைப் பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழிக்க அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. இதையொட்டி, மாவட்ட ஆட்சியர்கள், காவல் கண்காணிப்பாளர்கள் பங்கேற்கும் கலந்தாய்வுக் கூட்டம் சென்னை கலைவாணர் அரங்கில் வரும் 10-ம் தேதி நடைபெற உள்ளது.

இதில், போதைப் பொருட்கள் நடமாட்டத்தைத் தடுக்க பல்வேறு முடிவுகளை தமிழக அரசு மேற்கொள்ளும் எனத் தெரிகிறது. மேலும், மாவட்ட அளவில் பள்ளி, கல்லூரிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளன.

இது தொடர்பாக அனைத்து எம்எல்ஏ-க்களுக்கும் முதல்வர் ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: சமூகத்தில் போதைப்பொருட்களின் நடமாட்டத்தையும், பயன்பாட்டையும் முற்றிலும் ஒழிக்க தமிழக அரசு உறுதி ஏற்றுள்ளது. எனவே, அரசின் செயல்பாடுகளுக்கு முழு ஒத்துழைப்பும், ஆதரவும் அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

போதைப் பொருட்களைப் பயன்படுத்துவோர், அதற்கு முழுமையாக அடிமையாகி, மூழ்கிவிடுகின்றனர். போதைப் பொருட்கள் சிந்தனையை அழித்து, வளர்ச்சியைத் தடுக்கிறது. மேலும், எதிர்காலத்தைப் பாழாக்கி, குடும்பத்தையும் அழித்துவிடுகிறது. சமூகத்தின், நாட்டின் எதிர்காலத்தையும் கடுமையாகப் பாதிக்கிறது. எனவே, போதைப் பொருட்களை முற்றிலும் அழித்தாக வேண்டும்.

இதையொட்டி, ஆண்டுதோறும் ஆகஸ்ட் 11-ம் தேதியை போதைப் பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு தினமாகத் தேர்ந்தெடுத்துள்ளோம். அன்று பள்ளி, கல்லூரிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படும். போதையின் தீமைகள் குறித்த காணொலிக் காட்சிகள் திரையிடப்படும். எனவே, வரும் 11-ம் தேதி உங்கள் தொகுதிக்கு உட்பட்ட இடங்களில் நடைபெறும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் தவறாது பங்கேற்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

இது அரசியல் பிரச்சினை அல்ல; இளைய சமுதாயத்தினரின் வாழ்க்கைப் பிரச்சினை. எனவே, இதில் உங்கள் பங்களிப்பை கட்டாயம் வழங்க வேண்டும். தொடர் பிரச்சாரம் மூலமாகவே போதைப் பொருட்களின் தீமையை உணர்த்த முடியும். அதற்கு மக்கள் பிரதிநிதிகளாகிய உங்கள் ஒத்துழைப்பு மிகவும் அவசியம். இவ்வாறு முதல்வர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x