Published : 06 Aug 2022 07:49 AM
Last Updated : 06 Aug 2022 07:49 AM

விலைவாசி உயர்வு, ஜிஎஸ்டி வரி விதிப்பு உள்ளிட்டவற்றை கண்டித்து ஆளுநர் மாளிகையை முற்றுகையிட காங்கிரஸார் முயற்சி: கே.எஸ்.அழகிரி, நிர்வாகிகள், தொண்டர்கள் கைது

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர், அத்தியாவசியப் பொருட்கள் விலை உயர்வை கண்டித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் சென்னை சைதாப்பேட்டை சின்னமலை ராஜீவ் காந்தி சிலை அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், முன்னாள் தலைவர்கள் ஈவிகேஎஸ் இளங்கோவன்,கே.வீ.தங்கபாலு உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டனர். படம்: ம.பிரபு

சென்னை: விலைவாசி உயர்வு, அத்தியாவசிய உணவுப் பொருள் மீதான ஜிஎஸ்டி வரி விதிப்பு உள்ளிட்டவற்றை கண்டித்து தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில், ஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயன்ற காங்கிரஸ் கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.

பெட்ரோல், டீசல், சமையல்எரிவாயு விலை உயர்வு, பால்உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரி விதிப்பு உள்ளிட்ட மத்திய அரசின் மக்கள் விரோதப் போக்கை கண்டித்து தமிழக காங்கிரஸ் கட்சி சார்பில் சென்னை சின்னமலையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் முத்தழகன் தலைமை தாங்கினார்.

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, முன்னாள் தலைவர்கள் ஈவிகேஎஸ் இளங்கோவன், கே.வீ.தங்கபாலு, துணைத் தலைவர் ஆ.கோபண்ணா, அகில இந்திய செயலாளர் சி.டி.மெய்யப்பன் தமிழக காங்கிரஸ் கட்சியின் மாநிலபொதுச் செயலாளர் எஸ்.காண்டீபன் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர். இதில் கலந்து கொண்டவர்கள் மத்திய அரசைக் கண்டித்து கோஷம் எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தில் கே.எஸ்.அழகிரி பேசியபோது, ‘‘பால் உள்ளிட்ட ஏழை மக்கள் பயன்படுத்தும் அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கு மத்திய அரசுஜிஎஸ்டி வரி விதித்துள்ளது. இதனால் ஏழை, எளிய மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தின் பண்பாடு, கலாச்சாரத்தை சிதைக்க பாஜக முயற்சித்து வருகிறது’’ என்று தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, “2ஜி வழக்கில்ஆ.ராசா மீது பாஜக பொய்யான குற்றச்சாட்டை கூறி தேர்தலில் வெற்றி பெற்றார்களே தவிர, அதில் உண்மை இல்லை. ஆனால், 5ஜி அலைக்கற்றை ஏலம் விவகாரத்தில் பாஜக வசமாக மாட்டிக்கொண்டிருக்கிறது. 5ஜிஅலைக்கற்றை ஏலத்தில் ஊழல்நடைபெற்றுள்ளது.

எனவே, டெண்டரை ரத்து செய்ய வேண்டும். இல்லாவிட்டால் இதற்கு தகுந்த பதிலை தெரிவிக்க வேண்டும்’’ என்றார்.

பின்னர், கே.எஸ்.அழகிரி தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் ஆளுநர் மாளிகையை முற்றுகையிடுவதற்காக பேரணியாகச் சென்றனர். அங்கு பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டிருந்த போலீஸார் அவர்களை கைது செய்தனர். கைதுசெய்யப்பட்ட 1,000-க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினர் அப்பகுதியில் உள்ள சமுதாய நலக்கூடத்தில் தங்கவைக்கப்பட்டனர். அனைவரும் நேற்று மாலை விடுவிக்கப்பட்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x