Published : 06 Aug 2022 07:04 AM
Last Updated : 06 Aug 2022 07:04 AM

அரசு விதிமுறைகளுக்குப் புறம்பாக காரில் நீலநிற சுழல் விளக்குடன் வலம் வருவதாக வக்ஃப் வாரிய தலைவருக்கு எதிராக வழக்கு

சென்னை: அரசு விதிமுறைகளுக்குப் புறம்பாக காரில் தேசியக்கொடி மற்றும் நீலநிற சுழல் விளக்குடன் வலம் வருவதாக வக்ஃப் வாரிய தலைவர் அப்துல் ரஹ்மானுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், இதுதொடர்பாக போலீஸார் விசாரித்து முகாந்திரம் இருந்தால் வழக்குப்பதிவு செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வக்ஃப் வாரிய பாதுகாப்புக் குழு அறக்கட்டளை தலைவரான மதுரை கட்ராபாளையத்தைச் சேர்ந்த எம்.அஜ்மல்கான் சென்னைஉயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த சீராய்வு மனுவில், “தமிழ்நாடு வக்ஃப் வாரிய தலைவரான அப்துல் ரஹ்மான் தனது அலுவலக உபயோக காரில் தேசியக்கொடி மற்றும் நீல நிற சுழல் விளக்குடன் வலம் வந்து கொண்டிருக்கிறார். இது அரசு விதிமுறைகளுக்கு எதிரானது மட்டுமின்றி, தேசியக்கொடியை அவமதிக்கும் செயல்.

டிஜிபியிடம் புகார்

இதுதொடர்பாக தமிழக டிஜிபியிடம் கடந்த ஆண்டு டிசம்பரில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதையடுத்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தோம். அந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் சம்பந்தப்பட்ட காவல் நிலையம் அல்லது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டது.

அதன்படி ஜார்ஜ் டவுன் 7-வது பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தை நாடியபோது, இதுதொடர்பாக அரசிடம் முன் அனுமதி பெற வேண்டும் எனக்கூறி எங்களது மனுவை திருப்பி அனுப்பியுள்ளது. எனவே ஜார்ஜ் டவுன் 7-வது பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவை ரத்து செய்ய வேண்டும்என கோரியிருந்தார்.

இந்த வழக்கு உயர் நீதிமன்ற நீதிபதி டி.பரத சக்ரவர்த்தி முன்பாக நடந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் சண்முக வேலாயுதமும், அரசு தரப்பில் வழக்கறிஞர் பிரதாப்பும் ஆஜராகி வாதிட்டனர்.

போலீஸாருக்கு உத்தரவு

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, இதுதொடர்பாக சென்னை வடக்கு கடற்கரை காவல் நிலைய போலீஸார் விசாரணை நடத்தி, மனுதாரரின் புகாரில் முகாந்திரம் இருந்தால் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கலாம்என உத்தரவிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x