

சென்னை: சென்னை ஐஐடி மற்றும் தேசிய சித்த நிறுவனம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தத்தில் சென்னை ஐஐடி இயக்குநர் வி.காமகோடி, தேசிய சித்த நிறுவன இயக்குநர் ஆர்.மீனாகுமாரி ஆகியோர் கையெழுத்திட்டனர்.
இதன் மூலம் ஒருங்கிணைந்த பயிற்றுவித்தல் திட்டம் உருவாக்கப்படுவதோடு, மூலக்கூறு உயிரியல், மருத்துவம், ஆரோக்கிய முறை உள்ளிட்டவை குறித்த ஆராய்ச்சியும் நடத்தப்படவுள்ளது.
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் குறித்து சென்னை ஐஐடி இயக்குநர் வி.காமகோடி பேசும்போது, “சித்த மருத்துவம் என்பது இந்திய மருத்துவ முறைகளில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.
தற்போது மேற்கொள்ளப்பட்ட கூட்டு முயற்சியின் மூலம் சித்த மருத்துவத்தின் செயல்திறனை அறிவியல் மூலமாக வெளிக் கொண்டு வர உள்ளோம்.
இரு நிறுவனமும் இணைந்து கருத்தரங்கம், பயிற்சிப் பட்டறை, மாநாடு போன்றவற்றை நடத்தி கல்வி முறையை மேம்படுத்த இருக்கிறோம். இரு நிறுவனங்களிலும் பரிமாற்ற முறையில் பயிற்சி பெற மாணவர்கள், ஆராய்ச்சி மாணவர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்டோருக்கு அனுமதி வழங்கப்படும்” என்றார்.
ஒப்பந்தத்தின் நோக்கம் குறித்து தேசிய சித்த நிறுவன இயக்குநர் ஆர்.மீனாகுமாரி கூறும்போது, “மூலிகை ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்பத்தில் இரு நிறுவன மாணவர்களின் திறனையும் அதிகரிக்க முடியும். குறிப்பாக சித்த மருத்துவ முறையை மேம்படுத்த முடியும் என நம்புகிறோம்” என்றார்.