

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் மழை நீடிக்கும் நிலையில் அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. பாபநாசம் அணை நீர்மட்டம் ஒரே நாளில்9 அடியும், சேர்வலாறு அணை நீர்மட்டம் 17 அடியும் உயர்ந்துள்ளது.
திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் அணைப் பகுதிகளிலும், பிற இடங்களிலும் நேற்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் பெய்த மழையளவு (மி.மீட்டரில்):
பாபநாசம்- 15, சேர்வலாறு- 6, மணிமுத்தாறு- 7.2, அம்பாசமுத்திரம்- 4, சேரன்மகாதேவி- 4.4, களக்காடு- 1.2, பாளையங்கோட்டை- 4, திருநெல்வேலி- 4.6, கடனா- 18, ராமநதி- 6, கருப்பாநதி- 12, குண்டாறு- 62, அடவிநயினார்- 31, ஆய்க்குடி- 2, செங்கோட்டை- 7, தென்காசி- 4, சிவகிரி- 3.
பாபநாசம் அணை நீர்மட்டம் நேற்று முன்தினம் 75.30 அடியாக இருந்த நிலையில் நேற்று காலையில் 9 அடி உயர்ந்து 84 அடியாகஇருந்தது.
அணைக்கு 7,733 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. 156 அடி உச்சநீர்மட்டம் கொண்ட சேர்வலாறு அணை நீர்மட்டம் நேற்று ஒரே நாளில் 17 அடிஉயர்ந்து 117.78 அடியாக இருந்தது. தென்காசி மாவட்டத்தில் 85 அடிஉச்சநீர்மட்டம் கொண்ட கடனா அணை நீர்மட்டம் 4 அடி உயர்ந்து 74 அடியாக இருந்தது. 132 அடி உச்சநீர்மட்டம் கொண்ட அடவிநயினார் அணை நீர்மட்டம் 8 அடி உயர்ந்து 103 அடியாக இருந்தது.
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்துவரும் மழையால் குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் வெள்ளம் காரணமாக நேற்று 4-வது நாளாக சுற்றுலாபயணிகள் குளிக்க தடைவிதிக்கப்பட்டிருந்தது. களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக பகுதியிலுள்ள தலையணையில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.