

சென்னை: போக்குவரத்து கழகங்களுக்கு பொதுவான நிலையாணை உருவாக்குவதற்கான குழு அமைத்து போக்குவரத்து துறை செயலர் கே.கோபால் அரசாணை வெளியிட்டுள்ளார்.
தமிழகத்தில் உள்ள 8 போக்குவரத்து கழகங்களில் ஊழியர்களின் ஊதிய பிடித்தம், தண்டனை போன்றவை கோட்ட அளவில் மாறுபடும். இதை விடுத்து அனைத்துபோக்குவரத்து கழகங்களுக்கும் பொதுவான நிலையாணையை உருவாக்க வேண்டும் என போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் வலியுறுத்தி வந்தனர்.
இதுதொடர்பான வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பும் அளித்திருந்தது. அதன்படி, போக்குவரத்து துறை செயலர் பிறப்பித்த அரசாணையில் கூறியிருப்பதாவது: நீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படி, போக்குவரத்து கழகங்களுக்கு பொதுவான நிலையாணையை அமைப்பது தொடர்பாக நிர்வாகம்மற்றும் தொழிற்சங்க பிரதிநிதிகள் அடங்கிய குழுவை அமைக்குமாறு போக்குவரத்து கழக வழக்கறிஞர் கேட்டுக் கொண்டுள்ளார்.
குழு உறுப்பினர்கள்
இதன் தொடர்ச்சியாக மாநகரபோக்குவரத்து கழகம், விரைவுபோக்குவரத்து கழகம், சாலை போக்குவரத்து நிறுவனம் ஆகியவற்றின் மேலாண் இயக்குநர்கள், மாநகர போக்குவரத்து கழக தலைமை நிதி அலுவலர், கும்பகோணம் போக்குவரத்து கழக முதுநிலை துணை மேலாளர் (மனிதவள மேம்பாடு) ஆகிய துறைசார் அலுவலர்களும், தொழிலாளர் முன்னேற்ற சங்கப் பேரவை(எல்பிஎப்), தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஊழியர் சம்மேளனம் (சிஐடியு), தமிழ்நாடு அரசுபோக்குவரத்து கழக பணியாளர்சம்மேளனம் (டிடிஎஸ்எப்) ஆகியசங்கங்களின் பிரதிநிதிகள் அடங்கிய குழு அமைக்கப்படுகிறது.
இக்குழு, பொதுவான நிலையாணையில் அடிப்படை ஷரத்துகளில் மாற்றம் செய்யாமல், ஒரே மாதிரியான நிலையாணையை தயார் செய்து அளிக்குமாறு அரசு ஆணையிடுகிறது.
இவ்வாறு அரசாணையில் கூறப்பட்டுள்ளது.