Published : 05 Aug 2022 07:20 AM
Last Updated : 05 Aug 2022 07:20 AM
சென்னை: தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், மத்திய அரசு மீதுதிமுக பழி சுமத்துகிறது என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறினார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: நாடாளுமன்றத்தில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் விலைவாசி உயர்வு தொடர்பாக பதில் அளித்தபோது, தமிழகத்தை சேர்ந்தஎம்.பி.க்கள் வெளிநடப்பு செய்தனர். அவர்கள் உண்மையை ஏற்றுக்கொள்ள முடியாமல், கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்துள்ளது இதில் இருந்து தெளிவாகிறது.
பொருளாதார ரீதியாக அமெரிக்கா, ஜெர்மனி, இங்கிலாந்து போன்ற நாடுகள் பின்தங்கிய நிலையில் உள்ளன. ஆனால், இந்தியா வேகமாக வளரக்கூடிய நாடாக உள்ளது. இந்தியாவின் வளர்ச்சி விகிதம் 7.4 சதவீதமாக இருக்கிறது.
தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஜிஎஸ்டி தொடர்பாக சொல்வது அனைத்தும் பொய்.
ஜிஎஸ்டியில் எந்த மாநிலத்தையும், யாரும் வஞ்சிக்க முடியாது. தமிழகத்துக்கான ஜிஎஸ்டி தொகை முழுமையாக வழங்கப்பட்டுவிட்டது.
மத்திய அரசின் பட்ஜெட்டில் பெட்ரோல், டீசல் விலையைக் குறைப்போம் என்று சொல்லவில்லை. ஆனால், தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக பெட்ரோல், டீசல், எரிவாயுசிலிண்டர் விலையைக் குறைப்போம் என்று திமுகதான் தனதுதேர்தல் அறிக்கையில் தெரிவித்திருக்கிறது.
அதை நிறைவேற்ற முடியாமல், தற்போது மத்திய அரசு மீது திமுக பழி போடுகிறது.
32 லட்சம் சிலிண்டர்கள்
தமிழகத்தில் உஜ்வாலா திட்டத்தின் கீழ் 32 லட்சம் சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வழங்கப்படுகின்றன. பாஜக ஆட்சி அமைத்து 8 ஆண்டுகளில் 99.8 சதவீதம் பேர் சமையல் எரிவாயு சிலிண்டர் பயன்பாட்டுக்கு வந்துவிட்டனர்.
5ஜி அலைக்கற்றையில் 71 சதவீதம் ஏலம் விடப்பட்டுள்ளது. அதில் ரூ.1 லட்சத்துக்கு 50 ஆயிரத்து 173 கோடி கிடைத்துள்ளது. இவ்வளவு தொகை விற்பனையானது இதுதான் முதல்முறை. பிஎஸ்என்எல் நிறுவனத்தை சீரமைக்க மத்திய அரசு ரூ.40 ஆயிரம் கோடி நிதி வழங்கியுள்ளது.
நடிகர் கனல் கண்ணன் பேசியது தவறு என்றால், திமுகவினர் பேசுவதும் தவறுதான்.
மின் கட்டணம் குறித்து புகார்கூறும் பாஜக தொண்டர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு முன்பு என் மீது நடவடிக்கை எடுக்கட்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT