

சேலம் மாவட்டம் முழுவதும் நேற்று பரவலாக பெய்த மழையால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் சூழ்ந்தது. ஏற்காட்டில் நிலவிய கடும் பனி மூட்டதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்தது.
தமிழகத்தில் வளிமண்டல சுழற்சி காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மாலை நேரங்களில் கனமழை பெய்து வருகிறது. கடந்த 1-ம் தேதி முதல் தினமும் மாலை, இரவு நேரங்களில் மழை பெய்து வருகிறது. நேற்று காலை முதல் மேகமூட்டமாக காணப்பட்ட நிலையில், மாலையில் இடியுடன் கனமழை கொட்டியது. மழையால், தாழ்வான பகுதிகளில் மழை நீர் சூழ்ந்தது. கிச்சிப்பாளையம், பச்சப்பட்டி, நாராயணன் நகர், அம்மாப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சாலைகளில் மழை நீர் தேங்கி நின்றது.
சேலம் மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையால், நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது .
ஏற்காட்டில் பனி மூட்டம்
ஏற்காட்டில் நேற்று காலை முதல் கனமழை பெய்து வருகிறது. மேலும், கடும் பனி மூட்டம் காரணமாக ஏற்காடு மலைப் பாதையில் வாகனங்களை இயக்க முடியாமல் ஓட்டுநர்கள் சிரமப்பட்டனர். முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி வாகனங்களை இயக்கினர்.
ஏற்காடு, நாகலூர், வெள்ளக்கடை உள்ளிட்ட பகுதிகளில் பெய்த மழையால், சாலைகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனங்கள் மழை நீரில் அடித்துச் செல்லப்பட்டன. மேலும், அப்பகுதிகளில் உள்ள மோரி பாலங்கள் மழை நீரில் நிரம்பி, அருவி போல தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
ஏற்காட்டுக்கு வந்த சுற்றுலாப் பயணிகள் மழையால் சுற்றிப்பார்க்க முடியாமல் விடுதிகளில் முடங்கினர். சாலையோர வியாபாரிகள் மற்றும் கடை வியாபாரிகள் மழையால் வியாபாரமின்றி கவலை அடைந்தனர். ஏற்காட்டில் பனி மூட்டம் மற்றும் மழையின் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்தது.