

திருமலை திருப்பதி பிரம்மோற்சவத்தை முன்னிட்டு ஹிந்து தர்மார்த்த சமிதி சார்பில் திருக்குடை ஊர்வலத் திருவிழா, சென்னை பூக்கடை காவல் நிலையம் அருகே தேவராஜ முதலி தெருவில் உள்ள சென்ன கேசவப் பெருமாள் கோயிலில் நேற்று தொடங்கியது. இதையொட்டி, நேற்று காலை சிறப்பு பூஜைகள் நடந்தன.
அதைத் தொடர்ந்து, பிற்பகல் 12 மணி அளவில் கோயில் பிரகாரத்தில் இருந்து வெண் பட்டால் உருவாக்கப்பட்ட 11 திருக்குடைகளும் வெளியே கொண்டுவரப்பட்டு, வரிசையாக அணிவகுத்து என்எஸ்சி போஸ் சாலை வழியாக புறப்பட்டன. குடைகளைத் தொடர்ந்து, பெருமாளின் 10 அவதாரங்களை குறிக்கும் சிலைகள், தனித்தனி வாகனங்களிலும், பின்னால் பன்னிரு ஆழ்வார்கள், கோமாதா ஆகிய சிலைகளும் சென்றன. அங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள், குடைகள் மீது மலர்களைத் தூவி, ‘கோவிந்தா, கோவிந்தா’ என கோஷம் எழுப்பினர்.
இந்த திருக்குடை ஊர்வலம் நேற்று மாலை வால்டாக்ஸ் சாலை, பெரம்பூர் பேரக்ஸ் சாலை, கொன்னூர் நெடுஞ்சாலை, தாக்கர் சத்திரம் வழியாக காசி விஸ்வநாதர் ஆலயத்தைச் சென்றடைந்தது.
இந்த விழாவில் ஹிந்து தர்மார்த்த சமிதி அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் எஸ்.வேதாந்தம்ஜி, அறங்காவலர் ஆர்.ஆர்.கோபால்ஜி, சென்னை ராமகிருஷ்ண மடத்தின் மேலாளர் சுவாமி விமூர்த்தானந்தா ஆகியோர் கலந்துகொண்டனர்.
இன்று (ஞாயிற்றுக்கிழமை) வில்லிவாக்கம் சவுமிய தாமோதரப் பெருமாள் கோயில், நாளை (3-ம் தேதி) திருமுல்லைவாயல் ஸ்ரீவெங்கடேஸ்வரா பள்ளி, 4-ம் தேதி திருவள்ளூர் மாவட்டம் புளியங்குப்பம் ஐஆர்என் திருமண மண்டபம், 5-ம் தேதி கீழ் திருப்பதிள என பல்வேறு இடங்களில் தங்கிச் செல்லும் திருக்குடை ஊர்வலம் 6-ம் தேதி திருமலையை அடைகிறது. அங்கு ஏழுமலையானுக்கு திருக்குடைகள் சமர்ப்பிக்கப்படுகின்றன.