

சென்னை: பொறியியல் கலந்தாய்வில் கொண்டுவரப்பட்ட புதிய நடைமுறைகள் தொடர்பாக விளக்கம் அளிக்கும் பயிற்சி முகாம், சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் நேற்று நடைபெற்றது.
இதில், தமிழகத்தில் உள்ள அனைத்து பொறியியல் கல்லூரிகளின் முதல்வர்கள், பொறியியல் சேர்க்கை சேவை மையப் பணியாளர்கள் கலந்து கொண்டனர். இந்தப்பயிற்சி முகாமில், தமிழ்நாடுபொறியியல் மாணவர் சேர்க்கை செயலாளர் புருஷோத்தமன் கலந்துகொண்டு பயிற்சி வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:
ஒவ்வோர் ஆண்டும் தனியார் கல்லூரிகளுக்கு பொறியியல் கலந்தாய்வு நடத்தப்பட்டு, மாணவர் சேர்க்கை நடைபெற்று வந்தது. இந்த நடைமுறையில் பொறியியல் படிப்பை தேர்வு செய்த சிலமாணவர்கள், பின்னர் பொறியியல் கல்லூரிகளில் சேருவதில்லை. இதனால் அந்த இடங்கள் காலியாகவே இருந்தன.
இதை தடுக்கும் வகையில், அண்ணா பல்கலைக்கழக மாணவர் சேர்க்கையில் புதிய நடைமுறைகளைக் கொண்டுவரத் திட்டமிடப்பட்டது.
அதன்படி, ஒரு மாணவர் ஒரு கல்லூரியை தேர்வு செய்துவிட்டு, 7 நாட்களுக்குள் அக்கல்லூரியில் சேர்ந்து விட்டாரா என்பதை சரிபார்த்து, எங்களுக்கு விரைவாக தகவல் தெரிவிக்க வேண்டும். ஒரு மாணவர் கல்லூரியை தேர்வு செய்துவிட்டு, அதில் சேரவில்லை என்றால், மீண்டும் இடஒதுக்கீடு அடிப்படையில் கலந்தாய்வு நடத்தி, அந்த காலி இடம் நிரப்பப்படும்.
இந்த ஆண்டு முதல் கல்லூரியில் சேருவதற்கான முன்பதிவுக் கட்டணம் ரூ.5 ஆயிரத்தை செலுத்தாமல், நேரடியாக கல்லூரிக்குச் சென்று, அரசு நிர்ணயித்துள்ள கல்விக் கட்டணத்தை செலுத்தி, அவர்களுக்கான இடத்தை உறுதிசெய்துகொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.