Published : 05 Aug 2022 07:36 AM
Last Updated : 05 Aug 2022 07:36 AM

ஆண்டுக்கணக்கில் வயிற்றில் கத்தரிக்கோலுடன் பெண் அவதி; ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்: தமிழக அரசுக்கு மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு

சென்னை: அரசு மருத்துவர்களின் அலட்சியத்தால் ஆண்டுக்கு கணக்கில் வயிற்றில் கத்தரிக்கோலுடன் அவதியடைந்த பெண்ணுக்கு, ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே உள்ள வி.கே.ஆர்.புரத்தைச் சேர்ந்த பாலாஜியின் மனைவி குபேந்திரி. இவர் கடந்த 2008-ம் ஆண்டு, பிரசவத்துக்காக திருத்தணி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அறுவை சிகிச்சை மூலம் அவருக்கு குழந்தை பிறந்த நிலையில், வீடு திரும்பிய பிறகும் அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டுள்ளது.

அறிக்கை கொடுக்க மறுப்பு

கடந்த ஆண்டு மே மாதம் கடுமையாக வயிற்று வலி ஏற்பட்டதையடுத்து, அவர் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு, குபேந்திரியின் வயிற்றுக்குள் கத்தரிக்கோல் இருப்பது தெரியவந்துள்ளது. ஆனால் மருத்துவர்கள் ஸ்கேன் அறிக்கையை பாலாஜியிடம் கொடுக்க மறுத்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து, பாலாஜி அவரது மனைவியை சென்னை, ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு அவருக்கு செய்யப்பட்ட அறுவை சிகிச்சை மூலம் சுமார் 12 ஆண்டுகளுக்கு பிறகு கத்தரிக்கோல் அகற்றப்பட்டது.

எனினும், அங்குள்ள மருத்துவர்களும் கத்தரிக்கோல் தான் வயிற்றுக்குள் இருக்கிறது என சொல்லாமல், உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என மட்டுமே பாலாஜியிடம் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

மருத்துவர்கள் மீது நடவடிக்கை

பின்னர் அதுகுறித்த விவரம் தெரிந்த பாலாஜி, பிரசவத்தின்போது அலட்சியமாக செயல்பட்ட மருத்துவர்கள் மற்றும் ஸ்கேன் அறிக்கையைத் தர மறுத்த மருத்துவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வரின் தனிப்பிரிவுக்கு புகார் அளித்தார்.

இது தொடர்பான செய்தி நாளிதழில் வெளியானது.

அதை அடிப்படையாகக் கொண்டு இந்த விவகாரத்தை மாநில மனித உரிமைகள் ஆணையம் விசாரணைக்கு எடுத்தது.

வழக்கை விசாரித்த ஆணையத்தின் உறுப்பினர் நீதிபதி துரை.ஜெயச்சந்திரன், குபேந்திரிக்கு ஒரு மாத காலத்துக்குள் ரூ.10 லட்சத்தை இழப்பீடாக தமிழக அரசு வழங்க வேண்டும் என உத்தரவிட்டார்.

சென்னை, ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அவருக்கு செய்யப்பட்ட அறுவை சிகிச்சை மூலம் 12 ஆண்டுகளுக்கு பிறகு வயிற்றில் இருந்த கத்தரிக்கோல் அகற்றப்பட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x