Published : 12 Oct 2016 09:02 AM
Last Updated : 12 Oct 2016 09:02 AM

கருணாநிதியுடன் மோதலை ஏற்படுத்த சமூக வலைதளங்களில் பொய்யான தகவல்: காவல் ஆணையர் அலுவலகத்தில் மு.க.அழகிரி புகார்

எனக்கும் எனது தந்தை கருணாநிதிக்கும் இடையே மோதலை ஏற்படுத்துவதற்காக சமூக வலைதளங்களில் பொய்யான தகவல்களை பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மு.க.அழகிரி புகார் மனு கொடுத்துள்ளார்.

சென்னை பெருநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி சார்பில் நேற்று ஒரு புகார் மனு கொடுக்கப்பட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:

முகநூல் போன்ற சமூக வலைதளங்களில் கடந்த 7, 8-ம் தேதி களில், ‘தமிழக உள்ளாட்சி தேர்தல் ஒத்திவைக்கப்பட்டிருப்பதால், திமுகவின் தோல்வி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது’ என்று நான் கூறியதுபோல செய்திகள் வந்துள்ளன. ஒரு நிருபரின் கேள்விக்கு நான் பதில் கூறியதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. ஆனால், அன்றைய தினத்தில் யாருக்கும் நான் பேட்டி கொடுக்கவில்லை. அப்படி கூறவும் இல்லை. ஒரு தனியார் தொலைக்காட்சியிலும் இதே செய்தி ஒளிபரப்பு செய்யப்பட்டது.

திமுக மற்றும் அதன் தலைவர்கள், தொண்டர்களுக்கு எதிராக நான் பேசவே இல்லை. எனது குடும்பத்தினரிடமும், என் கட்சிக்காரர்கள், ஆதரவாளர்களிடமும் எனக்கு கெட்ட பெயர் ஏற்படுத்தி, என் புகழை இழிவுபடுத்த வேண்டும் என்று திட்டமிட்டு இந்தச் செய்தியை பரப்பி உள்ளனர். எனது அரசியல் வாழ்க்கையையும், என் தனிப்பட்ட வாழ்க்கையையும் பாதிக்கும் வகையில் திட்டமிட்டு பொய்யான செய்தியை சமூக வலைதளங்களில் பரப்புகின்றனர்.

எனது தந்தை கருணாநிதிக்கும் எனக்கும் உள்ள உறவு பற்றியும், எங்களுக்கு இடையில் மோதல் ஏற்படுத்தவும், எங்கள் புகழை கெடுக்கவும் இப்படி பொய்ச் செய்தியை பரப்பி உள்ளனர். இதுபோன்று தவறான செய்தியை பரப்புபவர்களை கண்டுபிடித்து, அவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம் 469, 499, 500, 501, 504 மற்றும் 505 ஆகிய பிரிவுகளின் கீழ் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இந்த பொய்யான தகவல் தொடர்ந்து சமூக வலைதளங்களில் பரவுவதைத் தடுக்க வேண்டும்.

இவ்வாறு புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x