

உலக கோப்பையை வென்ற இந்திய கபடி அணிக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக தலைவர்கள் வெளியிட்ட அறிக்கைகள் பின்வருமாறு:
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ: உலகக் கோப்பை கபடித் தொடரில் இந்திய அணி சாம்பியன் பட்டத்தைப் பெற்றுள்ளது மிகவும் பாராட்டத்தக்கது. கபடிப் போட்டியில் உலகக் கோப்பையை வென்று நாட்டிற்கு பெருமையைத் தேடித் தந்த இந்தியக் கபடி அணி வீரர்களுக்கும், இந்திய அணியில் விளையாடிய தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த தமிழக வீரர் சேரலாதனுக்கும் மதிமுக சார்பில் வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ்: கபடி போட்டியில் இந்திய அணி 3-வது முறையாக உலக கோப்பை வென்று சாதனை புரிந்துள்ளது. இது மிகவும் பாராட்டத்தக்கது. கபடி தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுக்களில் ஒன்று. ஆனால், கபடியின் வளர்ச்சிக்காக தமிழக அரசு எதுவும் செய்யாததால் இந்திய கபடி அணியில் தமிழகத்தின் பிரதிநிதித்துவம் குறைந்து வருகிறது.
கபடிக்கும் ஜல்லிக்கட்டுக்கும் பெரிய வித்தியாசம் கிடையாது. ஜல்லிக்கட்டில் காளையை அடக்குவது போல், கபடி எதிரணி வீரர்களை அடக்க வேண்டும். கபடியில் இந்தியா உலக கோப்பை வென்றதற்கு குடியரசுத் தலைவர் முதல் பிரதமர் வரை பாராட்டு தெரிவித்துள்ள நிலையில், ஜல்லிக்கட்டு போட்டிகளையும் அனுமதிக்க வேண்டும்.
மற்ற விளையாட்டுகளைப் போலவே கபடிப் போட்டிகளையும் ஊக்குவிக்கும் வகையில் உலகக்கோப்பை வென்ற இந்திய அணி வீரர்களுக்கு தலா ரூ.1 கோடி ஊக்கத்தொகை வழங்க வேண்டும். 2020 ஒலிம்பிக்கில் கபடியை சேர்க்க இந்திய ஒலிம்பிக் சங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமாகா தலைவர் ஜி.கே.வாசன்: உலக கோப்பை கபடியில் இந்தியா சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. உலக கோப்பை கபடி போட்டியில் ஹாட்ரிக் சாதனை படைத்து சாம்பியன் பட்டத்தை வென்ற, இந்திய கபடி குழுவிற்கு என் மனம் நிறைந்த பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அதேபோல், தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே திருச்சனம்பூண்டியை சேர்ந்த தமிழக வீரர் சேரலநாதன் இக்கபடி குழுவில் இடம்பெற்றிருப்பது தமிழகத்திற்கு பெருமை சேர்ப்பதாக அமைந்துள்ளது.
சமக தலைவர் சரத்குமார்: கபடியில் உலக கோப்பை வென்ற இந்திய அணிக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.