Last Updated : 04 Aug, 2022 06:51 PM

 

Published : 04 Aug 2022 06:51 PM
Last Updated : 04 Aug 2022 06:51 PM

மேட்டூர் அணையில் இருந்து 2.10 லட்சம் கன அடி நீர் திறப்பு: காவரி கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

சேலம்: காவிரி நீர் பிடிப்பு பகுதியில் பெய்து வரும் கன மழை, கர்நாடக அணைகளில் இருந்து உபரி நீர் திறப்பால் மேட்டூர் அணைக்கு வந்து கொண்டிருக்கும் 2 லட்சத்து 10 ஆயிரம் கன அடி நீர், காவிரி ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது. கரையோர மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.

காவிரி ஆற்றில் விநாடிக்கு 2.10 லட்சம் கன அடி நீர் திறப்பு: கர்நாடகா மற்றும் கேரளாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கன மழை பெய்து வருவதால், கர்நாடகாவில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஏற்கெனவே, அந்த அணைகள் நிரம்பி உள்ளதால், இவ்விரு அணையில் இருந்தும் கூடுதலாக நீர் திறக்கப்பட்டுள்ளது.

மேட்டூர் அணைக்கு நேற்று விநாடிக்கு ஒரு லட்சத்து 40 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து, இன்று காலை 7.30 மணிக்கு விநாடிக்கு 1 லட்சத்து 60 ஆயிரம் கன அடியாக வந்து கொண்டிருந்த நீர் வரத்து, பகல் 10.15 மணிக்கு விநாடிக்கு ஒரு லட்சத்து 85 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது. மதியம் 12. 30 மணிக்கு மேட்டூர் அணைக்கு விநாடிக்கு 2 லட்சத்து 10 ஆயிரம் கன அடியாக மேலும் நீர் வரத்து அதிகரித்தது.

இதையடுத்து, மேட்டூர் அணையில் இருந்து நீர் மின் நிலையங்கள் வழியாக விநாடிக்கு 23 ஆயிரம் கன அடி நீரும், 16 கண் மதகு வழியாக விநாடிக்கு ஒரு லட்சத்து 87 ஆயிரம் கன அடி என மொத்தம் காவிரி ஆற்றில் 2 லட்சத்து 10 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. கிழக்கு , மேற்கு கால்வாய் பாசனத்துக்கு விநாடிக்கு 500 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. அணை நீர்மட்டம் 120.13 அடியாக உள்ளது. அணையில் நீர் இருப்பு 93.67 டிஎம்சி-யாக உள்ளது.

காவிரியில் வெள்ள பெருக்கு: மேட்டூர் அணையில் இருந்து காவிரி ஆற்றில் 2 லட்சத்து 10 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளதால், காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. காவிரி ஆற்றின் இரு கரைகளிலும் கரை புரண்டு ஓடி, எங்கு பார்த்தாலும் வெள்ளக் காடாக காட்சி அளிக்கிறது. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்கும் பட்சத்தில், அணையின் 16 கண் மதகுகளை திறந்து விடும் பணியில், ஊழியர்கள் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர். நீர் வளத்துறை அதிகாரிகள் மேட்டூர் அணைக்கு நீர் வரும் அளவு குறித்து, வெள்ளகட்டுப்பாடு அறையில் இருந்து 24 மணி நேர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கரையோர மக்களுக்கு ஆட்சியர் எச்சரிக்கை: மேட்டூர் அணைக்கு நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், ஆட்சியர் கார்மேகம் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: “காவிரி கரையோர மக்கள் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும். பொதுமக்களுக்கு வெள்ள அபாயம் அறியும் வண்ணம், தண்டோரா மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆபத்தை விளைவிக்கும் வகையில் நீர் நிலைகள் அருகில் செல்லவும், செல்பி புகைப்படம் எடுக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணை பூங்கா, செக்கானூர் கதவணை, கோட்டையூர், பரிசல் துறை, பூலாம்பட்டி, நெரிஞ்சிப்பட்டி உள்பட காவிரி கரையோர பகுதிகளில் சிறுவர்கள் அருகில் செல்வதை தவிர்க்க வேண்டும்.

கல்வடங்கம், கோனோரிப்பட்டி, பூலாம்பட்டி பகுதிகளில் உள்ள காவிரி ஆற்றின் கரையில் வெள்ள அபாயம் குறித்து, பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது. மேட்டூர் காவிரி கரையேர பகுதிகளில் வருவாய்துறையினர், உள்ளாட்சி துறையினர், காவல் துறையினர், தீயணைப்பு துறையினர் 24 மணி நேர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். வெள்ள அபாய எச்சரிக்கையை விதி முறை மீறி காவிரி ஆற்றுக்கு செல்பவர்கள் மீது காவல் துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்.” இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

படகு போக்குவரத்து நிறுத்தம்: எடப்பாடி அருகே உள்ள பூலாம்பட்டியில் படகு போக்குவரத்து நடந்து வருகிறது. பூலாம்பட்டியில் இருந்து ஈரோடு மாவட்டம் நெருஞ்சிபேட்டைக்கு விசை படகு மூலம் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர், அரசு அதிகாரிகள், அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் விவசாய பொதுமக்கள் சென்று வருவது உண்டு. காவிரி ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால், பூலாம்பட்டி காவிரி ஆற்றில் இயக்கப்பட்டு வரும் விசைப்படகு போக்குவரத்து 4-வது நாளாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதனால் அந்த வழியாக செல்லும் மக்கள் 10 கி.மீ. சுற்றி செல்கிறார்கள். மேட்டூர், தங்கமாபுரிபட்டணத்தில் உள்ள காவிரி மேம்பாலத்தில் இருந்து 16 கண் மதகு வழியாக சீறி பாய்ந்து வரும் வெள்ள நீரை, பொதுமக்கள் திரண்டு வந்து பார்த்து சென்ற வண்ணம் இருந்தனர். பாலத்தின் மீது மக்கள் கூட்டம் அதிகளவு இருந்ததால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து, அந்த பாலத்தில் இருந்து பொதுமக்கள், காவிரி ஆற்றினை பார்க்க காவல் துறையினர் தடை விதித்துள்ளனர்.

மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்த ஆண்டுகள்: மேட்டூர் அணைக்கு கடந்த 1961-ம் ஆண்டு விநாடிக்கு 2 லட்சத்து 84 ஆயிரத்து 606 கன அடி நீர் வரத்து வந்துள்ளது. அதேபோல, 1993-ம் ஆண்டு விநாடிக்கு 2 லட்சத்து 10 ஆயிரம் கன அடி, 2005-ம் ஆண்டு விநாடிக்கு 2 லட்சத்து 31 ஆயிரத்து 802 கன அடி, 2013-ம் ஆண்டு விநாடிக்கு ஒரு லட்சத்து 50 ஆயிரம் கன அடி, 2018ம் ஆண்டு விநாடிக்கு 2 லட்சத்து 05 ஆயிரம் கன அடி, 2022ம் ஆண்டு ஆக., 4ம் தேதி (இன்று) விநாடிக்கு 2 லட்சத்து 10 ஆயிரம் கன அடி நீர் வரத்து பதிவாகியுள்ளது.

அணையில் இருந்து அதிபட்சமாக கடந்த 1961-ம் ஆண்டு விநாடிக்கு 3 லட்சத்து 050 கன அடியும், 2005-ம் ஆண்டு விநாடிக்கு 2 லட்சத்து 41 ஆயிரத்து 300 கன அடியும், 2019-ம் ஆண்டு விநாடிக்கு 2 லட்சத்து 53 ஆயிரத்து 730 கன அடியும், இன்று (2022-ம் ஆண்டு) விநாடிக்கு 2.10 ஆயிரம் கன அடி காவிரி ஆற்றில் நீர் திறக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x