Published : 04 Aug 2022 03:23 PM
Last Updated : 04 Aug 2022 03:23 PM

கனமழை எச்சரிக்கை | மீட்புக் குழுக்கள், முகாம்களை தயார் நிலையில் வைத்திட கலெக்டர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தல்

சென்னை: கனமழையால் ஏற்படும் பாதிப்புகளை தவிர்த்திட தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவும், பாதிப்பு ஏற்படக் கூடிய இடங்களில் ஜே.சி.பி. இயந்திரங்கள், மரம் அறுப்பான்கள் உள்ளிட்ட உபகரணங்களுடன் பல்துறை மண்டல குழுக்களையும், மீட்புக் குழுக்களையும், நிவாரண முகாம்களையும் தயார் நிலையில் வைத்திடவும் மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: சென்னை தலைமைச் செயலகத்தில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (ஆக.4) தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பெய்துவரும் கனமழை மற்றும் மேட்டூர் அணையிலிருந்து வெளியேற்றப்படும் அதிகப்படியான வெள்ளநீரினை எதிர்கொள்ள மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து திருச்சிராப்பள்ளி, கரூர், சேலம், நாமக்கல், தஞ்சாவூர், அரியலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், ஈரோடு, திருவாரூர், கடலூர், திருப்பூர் ஆகிய மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் காணொலிக் காட்சி வாயிலாக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

தென் மேற்கு பருவ மழை தொடங்கியதிலிருந்து தமிழ்நாட்டில் தொடர்ந்து பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. கடந்த 1.6.2022 முதல் 3.8.2022 முடிய தமிழ்நாட்டில் 249.5 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. இது இயல்பான மழை அளவை விட 97 விழுக்காடு கூடுதல் ஆகும். கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கோயம்புத்தூரில் 45.07 மி.மீ. மழைப் பதிவாகியுள்ளது.

நாளை (ஆக.5) நீலகிரி, ஈரோடு மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழையும் பெய்யக்கூடும் என்றும், தருமபுரி, திருப்பத்தூர், வேலூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும், தமிழ்நாட்டின் இதர பகுதிகளில், ஓரிரு இடங்களில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆக.6-ம் தேதி அன்று நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும், தமிழ்நாட்டின் இதர பகுதிகளில், ஓரிரு இடங்களில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வானிலை ஆய்வு மைய முன்னறிவிப்பைத் தொடர்ந்து, தமிழகத்தில் அதி கனமழைப் பொழிவு ஏற்பட வாய்ப்புள்ள மாவட்டங்களின் கண்காணிப்பு அலுவலர்கள் தொடர்புடைய மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

கன மழையின் போது தேடல், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் மாவட்ட நிர்வாகத்துடன் ஒருங்கிணைந்து ஈடுபடும் பொருட்டு கன்னியாகுமரி, கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி ஆகிய மாவட்டங்களுக்கு தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படையின் 3 குழுக்களும் நீலகிரி மாவட்டத்தில், தேசிய பேரிடர் மீட்புப் படையின் இரண்டு குழுக்களும் நிலைநிறுத்தப்பட்டுள்ளது.

இக்கூட்டத்தின்போது, கனமழையின் காரணமாக ஏற்படும் பாதிப்புகளை தவிர்த்திட தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறும், பாதிப்பு ஏற்படக் கூடிய இடங்களில் ஜே.சி.பி. இயந்திரங்கள், மரம் அறுப்பான்கள் உள்ளிட்ட உபகரணங்களுடன் பல்துறை மண்டல குழுக்களையும், மீட்புக் குழுக்களையும், நிவாரண முகாம்களையும் தயார் நிலையில் வைத்திடவும் மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக முதல்வர் அறிவுறுத்தினார்.

இன்று முதல் ஆகஸ்ட் 6-ம் தேதிவரை, குமரிமுனை, மன்னார் வளைகுடா, தமிழக கடற்கரை மற்றும் தெற்கு வங்கக் கடல் பகுதிகளில், மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வரை பலத்த காற்று வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் இந்தப் பகுதிகளில் மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில், இந்த எச்சரிக்கை செய்தி, மீன்வளத் துறை மூலமாக மீனவர்களுக்கு தெரிவித்திடவும் தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x