Published : 04 Aug 2022 03:21 PM
Last Updated : 04 Aug 2022 03:21 PM

திருப்பூர் | அமராவதி அணையிலிருந்து 10 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றம்: வெள்ள அபாய எச்சரிக்கை

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள அமராவதி அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருவதால் ஆற்றின் கரையோரம் உள்ள பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் ஆற்றில் குளிக்கவோ, துணி துவைக்கவோ தடை விதிக்கப்பட்டுள்ளது என்று திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் அறிவித்துள்ளார்.

திருப்பூர், கோவை, நீலகிரி, தேனி, ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இதன்காரணமாக, நீர்ப்பிடிப்பு பகுதிகளான கேரளா மற்றும் வால்பாறை பகுதிகளில் கனமழை பெய்து அமராவதி அணைக்கு நீர் வரத்து அதிகரித்து உள்ளது.

அமராவதி அணை மற்றும் அதன் நீர்ப்பிடிப்பு பகுதிகளான மூணார், தேவிகுளம், கோவில் கடவு பகுதிகளிலும் கனமழை பெய்து வருவதால் அணைக்கு நீர்வரத்து அதிகளவு இருந்து வருகிறது. மேலும் அமராவதி ஆற்றின் துணை ஆறுகளான தேனாறு, சின்னாறு, பாம்பாற்றில் அதிக வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. அணையின் முழு கொள்ளளவான 90 அடியில் மதியம் 1 மணி நிலவரப்படி நீர்வரத்து 7600 கன அடியாகவும் நீர் மட்டம் 88.23 அடியாகவும் உள்ளது.

தொடர்ந்து அணைக்கு நீர்வரத்து அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளதால், அமராவதி அணையில் இருந்து உபரி நீர் அமராவதி ஆற்றில் 10,600 கனஅடி திறந்து விடப்பட்டுள்ளது. மேலும் ஆற்றில் திறக்கும் உபரிநீர் அதிகரித்து விடப்படும் என்பதால், அமராவதி ஆற்றின் கரையோரம் திருப்பூர் கரூர் மாவட்டத்தில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

எனவே பொதுமக்கள் விழிப்புடனும், முன்னெச்சரிக்கையுடனும் பாதுகாப்பாக இருக்க வேண்டும். ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ, துணி துவைக்கவோ முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆற்றில் நீர்வரத்து தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

உடுமலை அமராவதி ஆற்றின் கரையோரம், அதன் நீர்ப்பிடிப்பு பகுதி மற்றும் ஆறு, குளம், கால்வாய் போன்ற வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ள பகுதிகளுக்கு அருகே வசிப்பவர்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். குழந்தைகளை நீர்நிலைகளில் குளிப்பதற்கோ, விளையாடுவதற்கோ அனுமதிக்கக்கூடாது, என் திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து நீர்வரத்து அதிகரிக்கும் நிலை உள்ளதால் அமராவதி அணையில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். ''அணைக்கு நீர்வரத்து அதிகரிக்கும் நிலையில் உபரி நீர் திறப்பு மேலும் அதிகரிக்கப்படும்'' என அதிகாரிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x